வாஷிங்டனில் உற்சாக வரவேற்பு பிரதமர் மோடி, அதிபர் டிரம்ப் நாளை பேச்சு : வெள்ளை மாளிகை விருந்தில் பங்கேற்பு; எச்1பி விசா விவகாரம் பேசப்படுமா?

தமிழ் முரசு  தமிழ் முரசு
வாஷிங்டனில் உற்சாக வரவேற்பு பிரதமர் மோடி, அதிபர் டிரம்ப் நாளை பேச்சு : வெள்ளை மாளிகை விருந்தில் பங்கேற்பு; எச்1பி விசா விவகாரம் பேசப்படுமா?

வாஷிங்டன்: அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடிக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வெள்ளை மாளிகையில் டிரம்பை சந்தித்து பேசும் பிரதமர் மோடி நாளை நடைபெறும் விருந்தில் பங்கேற்கிறார்.

மோடி, டிரம்ப் சந்திப்பின் போது எச்1பி விசா விவகாரம் குறித்து பேசப்படும் என அமெரிக்க வாழ் இந்தியர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
பிரதமர் மோடி அரசு பயணமாகப் போர்ச்சுகல், அமெரிக்கா மற்றும் நெதர்லாந்து ஆகிய மூன்று நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். முதற்கட்டமாக நேற்று போர்ச்சுகல் நாட்டுக்குச் சென்ற பிரதமர் மோடிக்கு லிஸ்பன் நகரில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அந்நாட்டு பிரதமர் அந்தோணியோ கோஸ்டோவை மோடி சந்தித்துப் பேசினார்.

இந்த பேச்சுவார்த்தையின் போது இரு நாட்டு தலைவர்களும் இணைந்து பல்வேறு ஒப்பந்தங்களை மேற்கொண்டனர்.

தீவிரவாத ஒழிப்பில் இணைந்து செயல்படுவது என முடிவு செய்யப்பட்டது. மேலும் 4 மில்லியன் யூரோ மதிப்பில் நிதி ஒதுக்கவும் முடிவு செய்யப்பட்டது.

பொருளாதாரம், வர்த்தகம் உள்ளிட்ட முக்கிய துறைகளில் ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்பட்டன. இதனைத் தொடர்ந்து போர்ச்சுகல் பயணத்தை முடித்துக் கொண்ட பிரதமர் மோடி நேற்றிரவு அமெரிக்கா சென்றடைந்தார்.

வாஷிங்டன் சென்ற பிரதமர் மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து அமெரிக்கா வாழ் இந்தியர்கள் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். முன்னதாக அதிபர் டிரம்ப் தனது டுவிட்டரில், உண்மையான நண்பரான உங்களுடன் இரு நாட்டு உறவு குறித்து முக்கிய அம்சங்களை பற்றி பேச விரும்புகிறேன் என்று தெரிவித்திருந்தார்.

இதற்கு நன்றி தெரிவித்து பதில் அளித்திருந்த மோடி தனது டுவிட்டரில்,  தனிப்பட்ட முறையில் என்னை வரவேற்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் என்று குறிப்பிட்டிருந்தார். நாளை பகலில் வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டிரம்ப், பிரதமர் மோடி சந்திப்பு நடைபெறுகிறது.

வெள்ளை மாளிகையில் சுமார் 5 மணி நேரம் இரு நாட்டு தலைவர்களும் செலவிட உள்ளனர். மாலை 3. 30 மணிக்கு தொடங்கி இருவரும்  சுமார் 5 மணி நேரம் பேச்சு வார்த்தை நடத்துவார்கள் என வெள்ளை மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் அதிபர் டிரம்ப் அளிக்கும் விருந்திலும் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

அதிபராக டிரம்ப் பதவியேற்ற பிறகு டிரம்புடன் வெள்ளை மாளிகை விருந்தில் பங்கேற்கும் முதல் வெளிநாட்டு தலைவர் பிரதமர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் ஏற்கனவே சீன அதிபர் ஜீ ஜிங்பிங், ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே ஆகியோருக்கு புளோரிடாவில் டிரம்ப் தனிப்பட்ட முறையில் விருந்து அளித்துள்ளார். பிரதமர் மோடியின் இந்த அமெரிக்க பயணத்தின் போது இன்று ஆப்பிள் நிறுவன தலைவர் டிம் குக், கூகுள் அதிகாரி சுந்தர் பிச்சை, மைக்ரோ சாப்டின் சத்யா நாதெள்ள உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட தொழில் துறை தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்த உள்ளார். இந்த சந்திப்பு இந்திய முதலீட்டில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதே போல் வெர்ஜினியாவில் சுமார் 600க்கும் அதிகமான இந்திய சமூகத்தினர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் மோடி பங்கேற்கிறார். அப்போது எச்1பி விசா விவகாரம் குறித்து டிரம்புடன் மோடி பேச வேண்டும் என இந்திய சமூகத்தினர் வலியுறுத்துகின்றனர்.

இதுகுறித்து அமெரிக்க வாழ் இந்தியர்கள் கூறுகையில், டிரம்பை சந்தித்து பேசும் மோடி, இந்தியர்களை பாதித்துள்ள முக்கிய அம்சமான எச்1பி விசா விவகாரம் குறித்து நிச்சயம் பேசுவார் என்று நம்பிக்கை தெரிவித்தனர்.

அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்ட் டிரம்ப் கடந்த ஜனவரியில் பொறுப்பேற்றார். பின்னர் அவர் பல்வேறு வெளிநாடுகளுக்கும் சுற்றுபயணம் சென்றார்.

ஆனால் இந்தியாவுக்கு வரவில்லை. இதற்கிடையில் டிரம்ப் அரசு குடியேற்றத்துறையில் பல்வேறு முக்கிய மாற்றங்களை செய்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டது.

இதனால் வெளிநாட்டினர் அமெரிக்கா செல்வதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. குறிப்பாக இந்தியர்களை மிகவும் பாதிக்கும் எச்1பி விசாவிலும் கெடுபிடிகள் இறுகின.

இந்த சூழலில் பிரதமர் மோடியுடன் அதிபர் டிரம்ப் இரண்டு முறை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். கடந்த ஒபாமா ஆட்சியின் போது இந்தியாவுடன் இணக்கமாக இருந்த அமெரிக்காவின் உறவு டிரம்ப் ஆட்சிக்கு பிறகு இறுக்கம் அடைய தொடங்கியது.

இந்த சூழலில்தான் பிரதமர் மோடியின் அமெரிக்க பயணம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. மோடி, டிரம்ப் சந்திப்பின் போது சிவில் அணு சக்தி, தீவிரவாத ஒழிப்பு, ராணுவ ஒத்துழைப்பு, சர்வதேச அளவிலான நிலவரம், வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முக்கிய அம்சங்கள் குறித்து பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரு நாட்டு தலைவர்கள் சந்திப்பு குறித்து மோடி மற்றும் டிரம்ப் ஆகியோர் தனித்தனியே அறிக்கை வெளியிட உள்ளனர்.

ஒன்றாக பேட்டி அளிக்கும் நிகழ்ச்சி நிரல் எதுவும் ஏற்பாடு செய்யப்படவில்லை என அமெரிக்க தரப்பில் கூறப்பட்டுள்ளது.   இந்தியாவின் முக்கிய பிரச்னையான எச்1பி விசா விவகாரம் குறித்த பேச்சு வார்த்தை இரு நாட்டு தலைவர்களின் பட்டியலிலும் இடம் பெற வில்லை என்று கூறப்படுகிறது. இரு நாட்டின் பொது அம்சங்கள் குறித்தே இருவரும் பேசக் கூடும் என்று எதிர்பார்ப்பு உள்ளது. பேச்சு வார்த்தைக்கு பின்னர் வெள்ளை மாளிகையில் டிரம்ப் அளிக்கும் விருந்தில் மோடி கலந்து கொள்கிறார்.   பின்னர் அமெரிக்காவில் டிரம்புடனான சந்திப்பை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி நாளை நெதர்லாந்து செல்கிறார்.

அங்கு அந்நாட்டு பிரதமர் மார்க் ரூட்டே, மன்னர் வில்லியம் அலெக்சாண்டர், ராணி மேக்சிமா ஆகியோரை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்துகிறார்.

பின்னர் தனது பயணத்தை முடித்துக் கொண்டு டெல்லி திரும்புகிறார்.

.

மூலக்கதை