பெற்றோரால் சர்ச்சை சப்தர்ஜங் மருத்துவமனையில் பெண்ணுக்கு பிறந்தது ஆணா,பெண்ணா?: டிஎன்ஏ பரிசோதனை அறிக்கையில் உறுதியானது

தினகரன்  தினகரன்

புதுடெல்லி: பெண்ணுக்கு பிறந்தது பெண் குழந்தை தான் என்று, டிஎன்ஏ பரிசோதனை அறிக்கையில் உறுதியானதை அடுத்து, சப்தர்ஜங் மருத்துவமனை பெண் குழந்தையை சம்பந்தப்பட்ட தம்பதியிடம்  ஒப்படைத்தது. டெல்லியை சேர்ந்த பெண் சோனியா (25). நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து, கடந்த 1ம் தேதி சப்தர்ஜங் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சோனியாவிற்கு பெண் குழந்தை பிறந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். ஆனால், தனக்கு ஆண் குழந்தை தான் பிறந்தது, மருத்துவர்கள் பெண் குழந்தை பிறந்ததாக மாற்றி கூறுகின்றனர் என மருத்துவர்கள் மீது சோனியா மற்றும் அவரது கணவர் குற்றம்சாட்டினர். இதையடுத்து, குழந்தைக்கு  டிஎன்ஏ பரிசோதனை எடுக்க வலியுறுத்தி, தம்பதியினர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர். போலீசாரின் அனுமதியுடன், சப்தர்ஜங் மருத்துவமனையில் குழந்தைக்கு டிஎன்ஏ பரிசோதனை எடுக்கப்பட்டது. இதன் அறிக்கை நேற்று முன்தினம் சமர்பிக்கப்பட்டது. அதில், சோனியாவிற்கு பெண் குழந்தை பிறந்தது உறுதியானது. இதுகுறித்து, சப்தர்ஜங் மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர் ஏ.கே.ராய் கூறுகையில்,” சோனியா என்ற பெண்ணுக்கு பெண் குழந்தை தான் பிறந்தது என்பதை டிஎன்ஏ பரிசோதனையின் மூலம் தெளிவாகி உள்ளது. இதன்மூலம், தம்பதியினரின் குற்றச்சாட்டுகள் மறுக்கப்படுகிறது. மேலும், மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களை தவறாக பேசியது மட்டுமின்றி, மருத்துவ பிரிவை செயல்பட விடாமல் தொந்தரவு கொடுத்த தம்பதியினர் மற்றும் குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்கும்படி மருத்துவமனை சார்பில் போலீசில் புகார் தெரிவித்துள்ளோம். டிஎன்ஏ பரிசோதனை அறிக்கை உறுதியானதை அடுத்து, பெண் குழந்தை தம்பதியினரிடம் ஒப்படைக்கப்பட்டது’’ என்றார்.

மூலக்கதை