அதிகரிக்கும் கொசுத் தொல்லை ‘கொலை ெசய்ய தூண்டும் செயலுக்கு ஒப்பானது மாநகராட்சிகளின் மெத்தனம்’: ஐகோர்ட் காட்டம்

தினகரன்  தினகரன்

புதுடெல்லி: நகரில் அதிகரித்து வரும் கொசு இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த தவறிய 3 மாநகராட்சிகளின் செயல், ‘‘கொடூர கொலைக் குற்ற தூண்டுதல் அல்லது மிதமிஞ்சிய வேகத்தில் வாகனம் ஓட்டி கொலை செய்வதற்கு ஒப்பான அலட்சியம்’’, எனஉயர் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. டெங்கு, சிக்குன்குனியா, மலேரியா போன்ற நோய்கள் பாதிப்பு எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்தவாறு உள்ளது. இதனை தடுக்க தவறியதாக மாநகராட்சிகளை குற்றஞ்சாட்டி உயர்நீதிமன்றத்தில் இரண்டு வக்கீல்கள் சார்பில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. தலைமை நீதிபதி (பொறுப்பு) கீதா மிட்டல் மற்றும் நீதிபடி ஹரி சங்கர் ஆகியோர் வழக்கை விசாரித்து வருகின்றனர்.நீதிமன்றத்திற்கு உதவும் வகையில் ‘உள்ளூர் கமிஷனராக’ நியமிக்கப்பட்ட பத்திரிகையாளர் ஒருவர், டெல்லியின் பல்வேறு இடங்களிலும் மலையளவு குவிந்த குப்பை தொடர்பான வீடியோ மற்றும் புகைப்பட ஆதாரங்களை நேற்று முன்தினம் சமர்ப்பித்தார். அதை பார்வையிட்ட நீதிபதிகள், குப்பை விவகாரத்தில் உண்மை நிலவரம் என்ன என்பதைக் கண்டு முகம் சுழித்தனர். விசாரணையின் போது, மாநகராட்சிகள் சார்பில் உயர் நீதிமன்றத்தில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் சஞ்சய் ஜெயின் ஆஜராகி கூறுகையில், ‘‘குப்பை மற்றும் அது தொடர்பான மேலாண்மை திட்ட நிறுவனங்களும் மாநகராட்சிகளும் ஒருங்கிணைந்து ஒருமித்த கருத்துடன் பாடுபட்டால் பிரச்னை தீர்ந்துவிடும்’’, என்றார். அவரது பதிலால் நீதிபதிகள் மேலும் கோபமடைந்தனர். இதையடுத்து ஆணையர் உள்பட மாநகராட்சி அதிகாரிகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்து நீதிபதிகள் கூறியதாவது: மாநகராட்சிகள் சார்பில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ‘ஐந்தாண்டு செயல் திட்ட அறிக்கை’ படிப்பதற்கு மிகவும் அருமையாக இருக்கிறது. மாநகராட்சி அதிகாரிகள் உயிரைக் கொடுத்து வேலை பார்க்கிறார்கள் என கருத வைக்கும் இந்த அறிக்கையை தயாரிப்பதற்குள், எத்தனை சமோசாக்கள் விழுங்கப்பட்டது, எத்தனை கப் டீ குடித்தனர் எனும்  மலைப்புதான் ஏற்படுகிறது. பேப்பரில் சிறப்பாக தெரியும் அறிக்கை, நடைமுறை செயல்பாட்டில் பூஜ்யமாக உள்ளது. மாநகராட்சிகளின் அலட்சியத்தால் பெருகி வரும் கொசுத் தொல்லை காரணமாக மக்கள் படும் அவஸ்தையை, கொலை செய்யும் நோக்கமின்றி கொலைவெறித் தாக்குதல் தொடுக்கும் மாநகராட்சியின் செயலாக ஏன் கருதக் கூடாது? அல்லது பயங்கர வேகத்தில் வாகனம் ஓட்டி உயிரை பறிக்கும் நடவடிக்கையாக ஏன் கருதக்கூடாது? மாநகராட்சிகள் தங்களது நிர்வாக அமைப்பு முறையை சிறப்பாக செயல்படும் விதத்தில் மாற்றி அமைக்க வேண்டும். குப்பை அகற்றுதலில் குறை அல்லது திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் சுணக்கம் என பிற நடவடிக்கைகள் மீது பழி சுமத்துவதற்கு முன்னர், அதிகாரிகள் உருப்படியாக வேலை பார்க்கிறார்கள் என்பதை நிர்வாகம் உறுதிபடுத்த வேண்டும். எனவே, தண்ணீர் தேங்குவதற்கு  மாநகராட்சிகளின் அலட்சியம் காரணம். மெத்தனமாக செயல்படும் அதிகாரிகள் மீது  கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். சுகாதாரப் பணியாளர்கள் மீது குறை சுமத்துவதை நிறுத்தி,  உருப்படியான சிறந்த செயல் திட்டத்துடன் வரும் 27ம் தேதி ஆஜராக வேண்டும். குறிப்பாக 3 ஆணையர்களும் நீதிமன்றத்தில் குறிப்பிட்ட தேதியில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் சாட்டையை சுழற்றியுள்ளனர்.

மூலக்கதை