ராம்நாத் கோவிந்துக்கு அரசு சார்பில் தற்காலிக பங்களா ஒதுக்கீடு

தினமலர்  தினமலர்
ராம்நாத் கோவிந்துக்கு அரசு சார்பில் தற்காலிக பங்களா ஒதுக்கீடு

புதுடில்லி : தே.ஜ., கூட்டணியின் சார்பில், ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள, ராம்நாத் கோவிந்துக்கு, அரசு சார்பில், டில்லியில் தற்காலிகமாக பங்களா ஒதுக்கப்பட்டு உள்ளது.

பாதுகாப்பு காரணம்:


ஜனாதிபதி தேர்தல், ஜூலை, 17ல் நடக்கிறது. இந்த தேர்தலில், பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணி சார்பில், பீஹார் கவர்னராக இருந்த, ராம்நாத் கோவிந்த், வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார்.

பீஹார் கவர்னராக இருந்த போது, அவருக்கு, டில்லியில், வடக்கு அவென்யூவில் பங்களா ஒதுக்கப்பட்டிருந்தது. தற்போது, ஜனாதிபதி வேட்பாளராக, அவர் அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து, பாதுகாப்பு காரணங்களுக்காக, அவருக்கு பெரிய பங்களா ஒதுக்க முடிவு செய்யப்பட்டது.

டில்லி, அக்பர் சாலையில் உள்ள, மத்திய அமைச்சர் மகேஷ் சர்மாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பங்களாவை, கோவிந்துக்கு ஒதுக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. ஜனாதிபதி தேர்தல் முடிந்து, முடிவுகள் வெளியாகும் வரை, இந்த பங்களாவில், கோவிந்த் இருப்பார் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ராஜாஜி தெரு:


இதற்கிடையில், ஜனாதிபதி பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பின், பிரணாப் முகர்ஜி தங்குவதற்கு, ராஜாஜி தெருவில், மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் தங்கியிருந்த பங்களாவை ஒதுக்க, முடிவு செய்யப்பட்டு உள்ளது.

மூலக்கதை