'தூய்மை இந்தியா' திட்டத்தில் முதலிடம்... சாத்தியமா? இந்தூர் சென்று வந்த அதிகாரிகள் ஆதங்கம்

தினமலர்  தினமலர்
தூய்மை இந்தியா திட்டத்தில் முதலிடம்... சாத்தியமா? இந்தூர் சென்று வந்த அதிகாரிகள் ஆதங்கம்

'துாய்மை பணியில், எந்த சமரசத்திற்கும் இடம் கொடுக்காததால் தான் இந்துார் மாநகராட்சி, நாட்டிலேயே துாய்மை நகரங்கள் பட்டியலில் முதலிடம் பிடித்து, மற்ற நகரங்களுக்கு முன்னுதாரணமாக திகழ்கிறது' என, தமிழக உள்ளாட்சி துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சகம், ஒவ்வொரு ஆண்டும் துாய்மை நகரங்களின் தரவரிசை பட்டியலை வெளியிட்டு வருகிறது. கடந்த ஆண்டு, சென்னை மாநகராட்சி, இப்பட்டியலில், 235வது இடத்தை பிடித்து, மோசமான சாதனையை பதிவு செய்தது.
மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள, இந்துார் மாநகராட்சி, 'துாய்மை இந்தியா' பட்டியலில் முதலிடம் பிடித்தது. இதையடுத்து, இந்துார் மாநகராட்சியின் துாய்மை பணிகள் குறித்து, அம்மாநகராட்சி சார்பில், ஒரு நாள் பயிற்சி அளிக்கப்பட்டது.

'டிஸ்மிஸ்':
நாடு முழுவதும் பல்வேறு நகரங்களின் அதிகாரிகள், இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டனர். சென்னை, திருச்சி மாநகராட்சிகள் உட்பட, தமிழக உள்ளாட்சி அதிகாரிகளும், இந்துார் பயிற்சி வகுப்பில் பங்கேற்றனர். இதில், துாய்மை பணிகள் எவ்வாறு மேற்கொள்ளப்படுகின்றன; எதிர்கொள்ளப்படும் சவால்கள் என்ன; அதற்காக செலவிடப்படும் தொகை; பணியாளர்கள் நடத்தப்படும் விதம்; அதிகாரிகளின் கண்காணிப்பு என, திடக்கழிவு மேலாண்மைக்கு, அம்மாநகராட்சி செய்யும் ஒட்டுமொத்த முயற்சிகளும் விவரிக்கப்பட்டன.

இந்துாரில், எந்த இடத்திலும் குப்பையையே பார்க்க முடியாத நிலையில், அம்மாநகராட்சியின் செயல்பாடுகள் குறித்து அறிந்த பின், தமிழக அதிகாரிகள் வாயடைத்து போயினர். ஆனால், துாய்மை நகராக இந்துாரை வைத்துக் கொள்ள, மாநகராட்சி அதிகாரிகள் எடுக்கும் அவ்வளவு முயற்சிக்கும், அம்மாநகர மேயர், மாநில அரசு முழு ஒத்துழைப்பு வழங்குவதாக, இந்துார் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

இந்துார் மேயர் மாலினி, துாய்மை பணியில் எந்த சமரசத்திற்கும் இடம் தர மாட்டார். இவரது அதிரடியால் தான், துாய்மை பணியில் மாநகராட்சியை ஏமாற்றிய, 100 துப்புரவு ஊழியர்கள், 'டிஸ்மிஸ்' செய்யப்பட்டுள்ளனர்; பணியில் சுணக்கம் காட்டிய, 500 ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

குப்பையை தெருவில் வீசினால், உடனடி அபராதம் வசூலிக்கப்படுகிறது. இதற்கு எந்த அரசியல்வாதியும் சிபாரிசுக்கு வரமாட்டார்; வந்தாலும், மேயர் ஏற்றுக் கொள்ளமாட்டார். அனைத்து தெருக்களிலும் நீலம், பச்சை என, இரு வண்ண தொட்டிகளை கொண்ட, மூன்று சக்கர சைக்கிள்கள் மூலம், மக்கும், மக்காத குப்பை கழிவுகள் பிரித்து பெறப்படுகின்றன.

சிறப்பு குழு:
குப்பை சேகரிப்பிலும், திடக்கழிவு மேலாண்மை திட்ட பணியிலும், ஊழியர்கள் பற்றாக்குறை என்ற பேச்சுக்கே இடமில்லை. திடக்கழிவு மேலாண்மை பணிகளை கண்காணிக்க, அதிகாரிகளை கொண்ட சிறப்பு குழுக்களை, அம்மாநகராட்சி நிர்வாகம் அமைத்துள்ளது.கடந்த ஓராண்டாக இரவு, பகலாக இந்த பணிகளை மேற்கொண்டுள்ளனர். இதற்கு கிடைத்த பரிசு தான், 1,808 மதிப்பெண்களுடன், துாய்மை நகரங்கள் பட்டியலில் முதலிடம்.

தமிழகத்திலும் இத்தனை கிடுக்கிப்பிடிகளையும் போட்டு, அரசு ஒத்துழைப்பு வழங்கினால், துாய்மை நகரங்கள் பட்டியலுக்கு போட்டி போடலாம். ஆனால், இங்கு தான் துப்புரவு ஊழியர்களுக்கும், அமைச்சர்கள் சிபாரிசு செய்கின்றனர்; அபராதம் விதித்தால், அரசியல்வாதிகள் மிரட்டுகின்றனர். குப்பை எடுக்கும் பணியிலும் கமிஷன் கணக்கு பார்க்கின்றனர். அப்படி இருக்கும் போது, எப்படி முன்னேற்றம் வரும்.-தமிழக அதிகாரிகள்


- நமது நிருபர் -

மூலக்கதை