தொழில்துறை எதிர்பார்ப்பு நிறைவேறும் கண்டிப்பாக... மத்திய அமைச்சர் உறுதியால் நிம்மதி

தினமலர்  தினமலர்
தொழில்துறை எதிர்பார்ப்பு நிறைவேறும் கண்டிப்பாக... மத்திய அமைச்சர் உறுதியால் நிம்மதி


திருப்பூர் · ஜூன் 23-மத்திய வர்த்தகத்துறை இணை அமைச்சர் நிர்மலாசீதாராமன், திருப்பூரில் இயங்கும் பொது சுத்திகரிப்பு மையத்தை, நேற்று பார்வையிட்டார். தொழில் துறையினர் கோரிக்கைகளை பரிசீலித்து, நிறைவேற்றி தருவதாக, அவர் உறுதி அளித்தார்.
மத்திய வர்த்தகத்துறை மற்றும் தொழில்துறை இணை அமைச்சர் நிர்மலா சீதாராமன், பல்லடம் அருகே அருள்புரத்தில் உள்ள பொதுசுத்திகரிப்பு மையத்துக்கு அமைச்சர் சென்றார். சாயக்கழிவுநீர், உயிரியல், வேதியியல் நுட்பங்களில் சுத்திகரிக்கும் கட்டமைப்பு, சவ்வூடு பரவல் முறை சுத்திகரிப்பு, பிரெயின் சொல்யூஷன், சுத்திகரிப்புக்கு பின் வெளியேறும் திடக்கழிவு, ஆய்வகங்கள் என அனைத்து கட்டமைப்புகளையும், அவர் பார்வையிட்டார்.சாய ஆலை உரிமையாளர்கள் சங்க தலைவர் நாகராஜன், ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜாசண்முகம், துணை தலைவர் பழனிசாமி உட்பட தொழில் துறையினருடன், அமைச்சர் ஆலோசனை நடத்தினர்.அப்போது தொழில் துறையினர் கூறியதாவது:திருப்பூரில், 18 பொது சுத்திகரிப்பு மையங்கள், 80 தனியார் சுத்திகரிப்பு மையங்கள் இயங்குகின்றன. துவக்கத்தில், ஒரு லிட்டர் சுத்திகரிப்பு செலவு, 40 காசுகளாக இருந்தது.தொழில் நுட்ப மேம்பாடுகளால், இது, 20 காசுகளாக குறைக்கப்பட்டுள்ளது. சுத்திகரிப்பு மையங்களின் இயக்கத்துக்கு, 120 மெகாவாட் மின்சாரம் தேவைப்படுகிறது. ஜவுளித்துறை வசம் உள்ள, ஐ.பி.டி.எஸ்., திட்டத்தில், மின் உற்பத்திக்கு மானியம் வழங்கினால், சுத்திகரிப்பு செலவினங்களை மேலும் குறைக்கலாம்.சுத்திகரிப்பின் மகத்துவம் உணர்ந்து, 18 சதவீத சேவை வரியை, மத்திய அரசு நீக்கம் செய்துள்ளது. ஜி.எஸ்.டி.,யில், பொதுசுத்திகரிப்பு மையங்களுக்கு, மீண்டும் சேவை வரி விதிக்கும் நிலை உள்ளது. சேவை வரியிலிருந்து, சுத்திகரிப்பு மையங்களுக்கு, வரி விலக்கு அளிக்கப்படவேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில், ""இயற்கை மாசுபாடுகளை தவிர்க்க, சுத்திகரிப்பு தொழில் நுட்பங்கள் மிக அவசியம். திருப்பூரில், சாயக்கழிவுநீரை திறம்பட சுத்திகரிப்பது வரவேற்கத்தக்கது. தொழில் துறையினர் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு, நிறைவேற்றி தரப்படும்,'' என்றார்.பா.ஜ., மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன், சாய ஆலை சங்க பொதுச்செயலாளர் முருகசாமி, இணை செயலாளர் ஜெயகுமார், சுத்திகரிப்பு மைய பொதுமேலாளர் கஜேந்திரன் உட்பட சுத்திகரிப்பு மைய நிர்வாகிகள் உடனிருந்தனர்.

மூலக்கதை