கார் குண்டு வெடித்து ஆப்கனில் 29 பேர் பலி

தினமலர்  தினமலர்

லஷ்கர் காஹ்: ஆப்கானிஸ்தானில், வங்கி ஒன்றின் முன், கார் குண்டு வெடித்ததில், 29 பேர் பலியாகினர். 60க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர். அண்டை நாடான ஆப்கானிஸ்தானில், தலிபான் பயங்கரவாதிகளின் வெறிச் செயல், மீண்டும் அதிகரித்துள்ளது. புனித ரமலான் மாதம் என்பதால், போர் நிறுத்தம் செய்வதாக, ஆப்கன் அரசு அறிவித்தது. ஆனால், இதை தலிபான் பயங்கரவாதிகள் ஏற்காமல், தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தெற்கு ஆப்கானிஸ்தான், லஷ்கர் காஹ் நகரில், வங்கி ஒன்றின் முன், பணம் எடுக்க, நேற்று காலை பலர் வரிசையில் நின்று கொண்டிருந்தனர். ரமலான் பண்டிகைக்கான விடுமுறை, இன்று முதல் துவங்குவதால், வங்கியில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.
அப்போது வேகமாக வந்த ஒரு கார், வரிசையில் நின்று கொண்டிருந்த மக்கள் மீது மோதியது. அடுத்த நிமிடம், அந்த கார் வெடித்து சிதறியது. இதில், 29 பேர், உடல் சிதறி, அதே இடத்தில் இறந்தனர்; 60க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள அவர்களில் பலரது நிலை, மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக
டாக்டர்கள் தெரிவித்தனர். இதனால், பலி
எண்ணிக்கை அதிகரிக்கும் என, அஞ்சப்படுகிறது.
இந்த தாக்குதலுக்கு, இதுவரை
எந்த பயங்கரவாத அமைப்பும், பொறுப்பேற்கவில்லை. எனினும், இந்த தாக்குதலை, தலிபான் பயங்கரவாதிகள்தான் நடத்தியுள்ளதாக, ஆப்கன் அரசு
தெரிவித்துள்ளது.

மூலக்கதை