'பி.எஸ்.எல்.வி., - சி 38' ராக்கெட்; இன்று காலை விண்ணில் பாய்கிறது

தினமலர்  தினமலர்
பி.எஸ்.எல்.வி.,  சி 38 ராக்கெட்; இன்று காலை விண்ணில் பாய்கிறது

சென்னை : 'பி.எஸ்.எல்.வி., - சி 38' ராக்கெட், 31 செயற்கை கோள்களுடன், இன்று விண்ணில் பாய்கிறது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான, 'இஸ்ரோ' - பி.எஸ்.எல்.வி., மற்றும் ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட்கள் மூலம், செயற்கை கோள்களை விண்ணில் செலுத்தி வருகிறது. அதன்படி, இஸ்ரோ நிறுவனம், பி.எஸ்.எல்.வி., - சி 38 ராக்கெட் மூலம், 'கார்ட்டோசாட் - 2' செயற்கை கோளை, இன்று காலை, 9:29 மணிக்கு, ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள, சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து, விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளது.

புவியை கண்காணிக்கும் இந்த செயற்கைகோளுடன், ஆஸ்திரியா, பெல்ஜியம், சிலி, செக் குடியரசு, பின்லாந்து, ஜெர்மனி, இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் இருந்து, 29 செயற்கைகோள்களும், இந்தியாவை சேர்ந்த ஒரு நானோ செயற்கைகோளும் விண்ணில் செலுத்தப்படுகிறது. இதற்கான, கவுன்டவுன், நேற்று காலை, 5:29 மணிக்கு துவங்கியது.

சென்னை, விமான நிலையத்தில், இஸ்ரோ தலைவர் கிரண்குமார் கூறியதாவது: பி.எஸ்.எல்.வி., - சி 38 ராக்கெட், 31 செயற்கை கோள்களுடன், இன்று காலை, 9:29 மணிக்கு விண்ணில் ஏவப்பட உள்ளது; அதற்கான கவுன்டவுன், நேற்று காலை துவங்கியது. இந்த செயற்கைகோள், புவியை கண்காணிக்கவும், நகர்ப்புற வளர்ச்சி உள்ளிட்ட காரணங்களுக்காவும் செலுத்தப்படுகிறது. அதேநேரத்தில், இஸ்ரோ அனுப்பிய மங்கள்யான் செயற்கைகோள், ஜூன், 19ம் தேதியுடன், 1,000 நாட்களை கடந்து, வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை