ராம்நாத் கோவிந்துக்கு டெல்லியில் புது முகவரி

தினகரன்  தினகரன்

புதுடெல்லி: தேசிய ஜனநாயக கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ராம்நாத் கோவிந்த்துக்கு, டெல்லியில் தற்காலிக  முகவரியாக மத்திய அமைச்சர் மகேஷ் சர்மாவின் அரசு பங்களா முகவரி கிடைத்துள்ளது. மத்திய கலாச்சார துறை அமைச்சர் மகேஷ் சர்மா. இவருக்கு  டெல்லியில் உள்ள ராஜாஜி மார்க் பகுதியில் 10வது எண் பங்களா அரசு சார்பில் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தது. இந்த வீடு முன்னாள் ஜனாதிபதி  அப்துல்கலாம் வசித்த வீடாகும். இந்நிலையில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஓய்வு பெற்ற பின்னர் இங்கு வருவதற்கு ஏதுவாக இந்த வீட்டை காலி  செய்து தரும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது. இதற்கு பதிலாக டெல்லியின் லத்தியன்ஸ் பகுதியில் உள்ள 10ம் எண் பங்களா அரசு சார்பில் அமைச்சர்  மகேஷ் சர்மாவிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த வீட்டையும் காலி செய்து தருமாறு அரசு சார்பில் அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தற்போது ஜனாதிபதி வேட்பாளராக  அறிவிக்கப்பட்டுள்ள ராம் நாத் கோவிந்த், இந்த வீட்டில் தற்காலிகமாக குடியேறவுள்ளார். வருகிற ஜூலை மாதம் 17ம்  தேதி ஜனாதிபதி தேர்தல்  நடைபெறும் வரை ராம்நாத் கோவிந்த் இங்கு தங்கியிருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. ஜனாதிபதி தேர்தலில் ராம்நாத் கோவிந்த் வெற்றிபெற்றால்  இந்த வீடு மீண்டும் மகேஷ் சர்மாவிற்கு ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெற்றி பெற்ற பின்னர் ராம்நாத் கோவிந்த் ராஷ்டிரபதி பவனில்  குடியேறுவார். வாஜ்பாயை சந்தித்தார்முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயை அவரது வீட்டில் நேற்று ராம்நாத் கோவிந்த் சந்தித்து வாழ்த்து பெற்றார். அவருடன் அவரது மனைவியும்  சென்றிருந்தார். முன்னதாக பாஜ மூத்த தலைவர் எல்கே அத்வானி மற்றும் மனோகர் ஜோஷி ஆகியோரையும் ராம்நாத் கோவிந்த் சந்தித்தார்.

மூலக்கதை