பிரதமர் நாளை மறுநாள் அமெரிக்காவுக்கு பயணம்: டிரம்புடன் முக்கிய பேச்சுவார்த்தை

தினகரன்  தினகரன்

புதுடெல்லி: பிரதமர் மோடி நாளை மறுநாள் 2 நாள் பயணமாக அமெரிக்காவுக்கு செல்கிறார். அப்போது அந்நாட்டு அதிபர் டிரம்புடன் முக்கிய  பேச்சுவார்த்தை நடத்துகிறார். பிரதமர் மோடி நாளை முதல் 3 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். முதல் பயணமாக அவர் போர்ச்சுக்கல்  செல்கிறார். அதைத் தொடர்ந்து 25ம் தேதி முதல் 2 நாட்களுக்கு அமெரிக்காவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். அதைத் தொடர்ந்து,  நெதர்லாந்து வழியாக அவர் இந்தியா திரும்புகிறார்.அமெரிக்க பயணத்தில் அந்நாட்டு அதிபர் டிரம்ப்பை சந்தித்து பேசி பல்வேறு புதிய ஒப்பந்தங்கள் தொடர்பாக பிரதமர் முடிவு செய்கிறார். இந்தியாவின்  மின்சக்தியை பெருக்க அமெரிக்க ஆற்றல்துறை அமைச்சகத்துடன் இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் ஒப்பந்தம் செய்ய  உள்ளது. மொத்தம் ரூ.200 கோடி நிதியை இதற்காக ஒதுக்க அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளது. முதற்கட்டமாக ரூ.,50 கோடி நிதி ஒதுக்கப்பட உள்ளது.  அமெரிக்க ஆற்றல்துறை அமைச்சகத்தின் செயலாளர் ரிக்கி பெரி கூறுகையில், “மின்சக்தி துறையில் புதிய கண்டுபிடிப்புகள் பொருளாதார  முன்னேற்றம் மற்றும் ஆற்றல்பாதுகாப்பை அமெரிக்கா மற்றும் இந்தியாவுக்கு வழங்கும்” என்றார்.மேலும், இந்திய கடற்பகுதியில் சமீபகாலமாக சீனாவின் நீர்மூழ்கி கப்பல்கள் வரத்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் சுமார் 7500 கிமீ  நீளமுள்ள கடற்பரப்பு பாதுகாப்பு இல்லாத நிலையை எட்டியுள்ளது. எனவே ஆளில்லா போர் விமானம்(டிரோன்) மூலம் கண்காணிக்க இந்தியா  நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக 22 அதிநவீன டிரோன்களை முதற்கட்டமாக அமெரிக்காவிடம் இருந்து வாங்கும் நடவடிக்கையில் இந்தியா  ஈடுபட்டுள்ளது. டிரம்ப்புடனான பேச்சின்போது பிரதமர் மோடி இதை முக்கிய கோரிக்கையாக வலியுறுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மூலக்கதை