கல்வி கவுன்சில் கூட்டத்தில் ஒழுங்கீனம் மாணவர் சங்க தலைவர், செயலாளர்கள் சஸ்பெண்ட்: ஜேஎன்யு பல்கலை நிர்வாகம் அதிரடி

தினகரன்  தினகரன்

புதுடெல்லி: மாணவர் சங்கத் தலைவர் மற்றும் செயலாளர்களை சஸ்பெண்ட் செய்து ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யு) நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (ஜேஎன்யு) கடந்த 16ம் தேதி கல்வி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், பல்கலையின் துணை தலைவர் உள்பட ஜேஎன்யு மாணவர் சங்க உறுப்பினர்கள், ஜேஎன்யு ஆசிரியர் சங்க உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர். கூட்டத்தின்போது, அவதூறு வார்த்தைகளை கூறி அநாகரீகமாகவும், ஒழுங்கீனமாகவும் நடந்துக் கொண்டதாக மாணவர் சங்கத் தலைவர் மோகித் குமார் பாண்டே, பொது செயலாளர் சதாரூபா சக்ரபோர்தி மற்றும் இணை செயலாளர் தப்ரேஸ் ஹசான் ஆகியோர் மீது நிர்வாகம் குற்றச்சாட்டு சுமத்தியது. இதையடுத்து, ஜேஎன்யு நிர்வாகம் மாணவர் சங்கத் தலைவர் உள்பட மூன்று பேரையும் சஸ்பெண்ட் செய்து நேற்று கடிதம் அனுப்பியது. மேலும், இதுதொடர்பாக விசாரணை நடத்தவும் தனிக்குழு அமைத்து உத்தரவிட்டுள்ளது. இந்த குழுவின் விசாரணை அறிக்கை வரும் வரை இந்த ஒழுங்கு நடவடிக்கை அமலில் இருக்கும் எனவும் பல்கலை நிர்வாகம் தெளிவுபடுத்தியுள்ளது. இதுகுறித்து, ஜேஎன்யு நிர்வாகம் அனுப்பிய கடிதத்தில்,‘‘முதற்கட்ட விசாரணையில், மோகித் குமார் பாண்டே ஒழுங்கீனமாக நடந்துக் கொண்டதற்கான ஆதாரம் இருக்கிறது. அதனால், விசாரணை குழுவின் இறுதிகட்ட அறிக்கை வரும்வரை, மோகித் குமார் உள்பட செயலாளர்களை சஸ்பெண்ட் செய்யப்படுகிறது. மேலும், பல்கலையின் எந்த ஒரு அமைப்பு கூட்டத்திலும் மூவரும் கலந்துக் கொள்வதை தற்காலிகமாக ரத்து செய்து உத்தரவிடப்படுகிறது” என்றிருந்தது.இந்த நடவடிக்ைக குறித்து மாணவர் சங்க உறுப்பினர்கள் கூறுகையில்,”பேராசிரியர்கள் தான் தாக்குதலில் ஈடுபட்டனர்” என்று தெரிவித்தனர். மேலும் இதுதொடர்பாக, சதரூபா சக்ரபோர்தி கூறுகையில் “ உண்மை இருட்டுக்குள் தள்ளப்பட்டு விட்டது. பல்கலையில் எழும் விமர்சன குரல்களை, துணை தலைவர் மௌனமாக ஒடுக்கி வருகிறார். நாளை (இன்று) நிலைக்குழு கூட்டம் நடைபெற இருக்கிறது. ஆனால், அதுகுறித்து இதுவரை எங்களுக்கு தகவல் வரவில்லை. இது எங்கள் மீது திட்டமிட்டு நடக்கும் தாக்குதல் “ என்றனர்.ஆனால், பல்கலை நிர்வாகத்தின் குற்றச்சாட்டிற்கு மறுப்பு தெரிவித்த, ஜேஎன்யு ஆசிரியர் சங்க உறுப்பினர்கள் மாணவர் சங்கத்தினருக்கு ஆதரவு அளித்து பேசினர். அப்போது ஆசிரியர் சங்கத் தலைவர் ஆயிஷா கித்வாய் கூறுகையில்,” மாணவர் சங்க உறுப்பினர்களை பல்கலையின் துணை தலைவர் மற்றும் அவர்களது குழுவினர் தாக்கியதற்கு நாங்கள் சாட்சியமாக இருக்கிறோம். கடந்த மே மாதம் நடைபெற்ற கவுன்சில் கூட்டத்தில் நடந்த பிரச்னையில் கூட மாணவர் சங்க உறுப்பினர்களின் அனுமதி இல்லாமல் நிர்வாகம் தான் வீடியோ பதிவு செய்தது. பல்கலை செயல்பட, ஜனநாயகம் உயிேராடு இருக்க போராடும் மாணவர் சங்கத்தினருடன் ஒற்றுமையாக இருந்து தொடர்ந்து போராடுவோம்’’ என்றார்.

மூலக்கதை