சம்பள பணத்தில் கொள்ளையா? சுகாதார பணியாளர்கள் ஊதியத்தை வங்கிக் கணக்கில் செலுத்தாதது ஏன்?: மாநகராட்சிகளுக்கு ஐகோர்ட் கண்டனம்

தினகரன்  தினகரன்

புதுடெல்லி: தூய்மை பணிகளை சரிவர மேற்கொள்ளாத துப்புரவு பணியாளர்களின் செயலுக்கு குட்டு வைத்த உயர் நீதிமன்றம், அவர்களது சம்பளத்தை வங்கிக் கணக்கில் செலுத்தாது ஏன் என்பது  என சரமாரியாக கேள்வி எழுப்பி மாநகராட்சி அதிகாரிகளுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்தது. குப்பை அள்ளுவதில் மெத்தனமாகவும் அலட்சியமாகவும் சுகாதார பணியாளர்கள் நடந்து கொள்கிறார்கள் எனும் குற்றச்சாட்டை 3 மாநகராட்சிகள் மீதும் சுமத்தி உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்குகள் தொடரப்பட்டன. அவற்றை ஒன்றாக இணைத்து தலைமை நீதிபதி (பொறுப்பு) கீதா மிட்டல் மற்றும் நீதிபதி ஹரி சங்கர் ஆகியோர் விசாரித்து வந்தனர். நேற்று முன்தினம் நடைபெற்ற விசாரணையின்போது, மனுதாரர் சார்பில் கூறப்பட்டதாவது: தொழிலாளர்களுக்கு சம்பள பட்டுவாடா செய்வதில் மாநகராட்சிகளில் முறைகேடு நடைபெறுகிறது. வருகை பதிவேட்டில் கையெழுத்திடும் ஊழியர்கள் அதன் பின், பணிக்கு செல்வதில்லை. சம்பளம் பட்டுவாடா செய்பவருக்கு ஊதியத்தில் குறிப்பிட்ட தொகையை தொழிலாளிகள் அளிக்கின்றனர். இதனால் குப்பைகள் அகற்றாமல், கொசுப்பெருக்கம் அதிகரித்து, டெங்கு, சிக்குன்குனியா போன்ற சுகாதார சீர்கேடு அதிகரிக்கிறது.இவ்வாறு குற்றச்சாட்டு கூறப்பட்டது. விசாரணைக்குப் பின்னர் நீதிபதிகள் கூறியதாவது: சுகாதார பணியாளர்களுக்கும் சம்பளம் பட்டுவாட செய்பவருக்கும் இடையே புனிதமில்லாத பந்தம் நிலவுகிறது. இது முறையற்றது. குப்பைகளை சேகரித்து அகற்ற வேண்டிய பணியாளர்கள் தங்களது பணியில் அக்கறையின்றி இருப்பது தலைநகரில் வேதனைப்பட வேண்டிய விஷயம். குப்பை மட்டுமன்றி மாநகராட்சிப் பணிகள் பலவற்றிலும் இதே நிலை நீடிப்பது கண்டிக்கத்தக்கது. வருகைப் பதிவேட்டில் கையெழுத்து இட்ட பின் பணியில் ஈடுபடாதது மிகவும் தவறானது. புனிதமற்ற இந்த பந்தத்தை மாநகராட்சிகள் எப்படி அனுமதிக்கின்றன? ஒப்பந்ததாரரைக் கொண்டு ஏன் பணம் பட்டுவாட செய்ய வேண்டும் என மாநகராட்சிகள் விளக்கம் அளிக்க வேண்டும்.ஊழியர்களுக்கு ரொக்கமாக ஏன் பட்டுவாட நடக்கிறது என்பது நீதிமன்றத்திற்கு விளங்கவில்லை. எல்லோருக்கும் வங்கிக் கணக்கு தொடங்கியுள்ள நிலையில், இன்னும் ஏன் ரொக்க பரிவர்த்தனை நடைபெறுகிறது என்பதை மாநகராட்சிகள் விளக்க வேண்டும். வங்கிக் கணக்கில் ஏன் ரொக்கம் செலுத்தப்படுவதில்லை என்றும் அதிகாரிகள் விளக்கம் அளிக்க வேண்டும். இவ்வாறு நீதிமன்றம் மாநகராட்சி அதிகாரிகளை வெளுத்து வாங்கியது.

மூலக்கதை