நகர தூய்மை பராமரிப்பு பற்றி 3 மேயர்களுடன் விரைவில் ஆலோசனை: வெங்கையா தகவல்

தினகரன்  தினகரன்

புதுடெல்லி: தலைநகர் டெல்லி முழுவதும் தூய்மையாக பராமரிப்பது தொடர்பாக விவாதிக்க, மூன்று மாநகராட்சி மேயர்களையும் மத்திய நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் வெங்கையா நாயுடு விரைவில் சந்தித்து பேச உள்ளார். வடக்கு டெல்லி மேயர் பிரீத்தி அகர்வால், நேற்று முன்தினம் வெங்கையா நாயுடுவை நேரில் சந்தித்து பேசினார். அப்போது வடக்கு மாநகராட்சி சந்தித்து வரும் பிரச்னைகள் குறித்து அமைச்சரிடம் எடுத்துரைத்தார். குறிப்பாக, நிதிப்பற்றாக்குறை உள்ளிட்ட பிரச்னைகளை விளக்கி, நிதி மேலாண்ைமையை சீராக்கும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார். இதற்காக நிலம் மற்றும் சொத்துக்களை மேம்படுத்துவதன் மூலம் வருவாயை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதை விளக்கினார். மேலும், குப்பைகள் கொட்டி மேலாண்மை செய்வதில் நிலம் கையிருப்பு பிரச்னை, திடக்கழிவுகள் மேலாண்மை மற்றும் கழிவுகளிலிருந்து மின்சக்தி உற்பத்தி, குப்பைகள் மறுசுழற்சி செய்வதில் கவனம் செலுத்தி வருவதையும் அமைச்சரிடம் மேயர் பட்டியலிட்டார்.அதோடு, இடம் பற்றாக்குறையால் பால்ஸ்வா குப்பை கிடங்கு நிரம்பி வழியும் பிரச்னைக்கு உடனடி தீர்வு காணப்பட வேண்டியது அவசியம் என்பதையும் வலியுறுத்தினார். இதையடுத்து, இதுபோன்ற விவகாரங்களுக்கு தீர்வு காண்பதோடு, நகரை முழுமையாக தூய்மையுடன் பராமரிப்பது பற்றி விரைவில் மூன்று மாநகராட்சி மேயர்களுடன் கலந்தாலோசனை செய்யப்படும் என உறுதியளித்தார்.

மூலக்கதை