ஊழல் புகார்களை விசாரிப்பதில் பாரபட்சம் சிபிஐ மீது ஏஏபி தலைவர்கள் புகார்: எய்ம்ஸ் ஊழலை மூடி மறைப்பதாக குற்றச்சாட்டு

தினகரன்  தினகரன்

புதுடெல்லி: எதிர்க்கட்சிகளை குறிவைத்து ரெய்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு பாய்ச்சல் காட்டும் சிபிஐ அமைப்பு, மத்திய அரசு மற்றும் பாஜ ஆளும் மாநிலங்கள் என்றால் கண்டுகொள்வதில்லை என ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டியுள்ளது. டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மற்றும் சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயினின் மனைவி ஆகியோர் வீடுகளில் நிதி முறைகேடு சம்பந்தபட்ட வழக்குகளில் சிபிஐ சமீபத்தில் அதிரடி சோதனை நடத்தியது.இதனை மேற்கோள்காட்டி, எதிர்க்கட்சி விவகாரத்தில் வேகம் காட்டும் சிபிஐ, பல ஆண்டுகளாகியும்  எய்ம்ஸ் மருத்துவமனை ஊழல் பிரச்னையில் மெத்தனமாக இருந்து வருகிறது என ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அசுதோஷ் மற்றும் செய்தித்தொடர்பாளர் சவுரப் பரத்வாஜ் ஆகியோர் கடுமையாக விமர்சித்தனர்.நிருபர்களிடம் அசுதோஷ் கூறியிருப்பதாவது: மத்திய அரசின் எய்ம்ஸ் நிறுவனத்தில் கடந்த 2012-14ம் ஆண்டுகளில் பொருட்கள் கொள்முதல் செய்ததில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளது என தொண்டு நிறுவனம் சார்பில் பொது நல வழக்கு தொடரப்பட்டது. ஊழலில் மூத்த அதிகாரிகளுக்கு முறைகேடுகளில் தொடர்பு இருப்பதை கண்டறிந்து உள்ளதாக, சிபிஐயும் எய்ம்ஸ் மருத்துவமனை தலைமை கண்காணிப்பு அதிகாரியாக அப்போது பதவி வகித்த சஞ்சீவ் சதுர்வேதியும் கூறியிருந்தனர். எனினும் அதிகாரிகளின் அலுவலகத்திலோ அல்லது வீடுகளிலோ ரெய்டு உள்ளிட்ட எந்த நடவடிக்கையிலும் சிபிஐ ஈடுபடவில்லை. அவர்கள் மீது வழக்கு கூட பதிவு செய்யப்படவில்லை. மாறாக மத்திய சுகாதார அமைச்சராக அப்போது இருந்த ஹர்ஷ் வர்தனுக்கு தற்போது அந்த பதவி வகித்து வரும் ஜே.பி.நட்டா அப்போது எழுதிய கடிதத்தில், ‘‘சதுர்வேதியை பணியில் இருந்து விடுவிக்கும்படி’’, குறிப்பிட்டிருந்தார்.அதே அமைச்சர் நட்டா, தொண்டு நிறுவனத்திற்கு அனுப்பிய பதில் விளக்கத்தில், ‘எய்ம்ஸ் மருத்துவமனை அதிகாரிகள் அல்லது அலுவலர்கள் மீதான முறைகேடுகள் உறுதி செய்யப்படவில்லை’’, என கூறியுள்ளார். இதனிடையே, டெல்லி உயர் நீதிமன்றத்தில் கடந்த 3ம் தேதி சிபிஐ தரப்பில் ஒரு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், எய்ம்ஸ் அதிகாரிகள் குற்றம் இழைக்கவில்லை என கண்டறியப்பட்டு இருப்பதால் அவர்கள் மீது ஊழல் வழக்கு மற்றும் எப்ஐஆர் பதிவு செய்யப் போவதில்லை என சிபிஐ கூறியுள்ளது.மத்திய அரசு நிறுவனம் என்றதும் சிபிஐ மற்றும் மத்திய சுகாதார துறையின் கருத்துகள் ஒருமித்து போகிறது.ஆனால், ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் என்றால் சிபிஐ நடவடிக்கைகள் தீவிரமாக உள்ளது. உதாரணத்திற்கு துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மற்றும் அமைச்சர் சத்யேந்தர் ஜெயினின் மனைவி ஆகியோரிடத்தில் நடத்தப்பட்ட சோதனைகளை குறிப்பிடலாம். எனவே, மத்திய அரசு மற்றும் பாஜ ஆளும் மாநிலங்களில் சிபிஐயின் நடவடிக்கைகள் கண்களை கட்டிக் கொண்டு செயல்படுவதாக உள்ளது. இவ்வாறு தெரிவித்தனர்.

மூலக்கதை