அரிதிலும் அரிதான அறுவை சிகிச்சை 3 வயது குழந்தைக்கு மாற்று ரத்த வகை கொண்ட சிறுநீரகம் பொருத்தி சாதனை

தினகரன்  தினகரன்

புதுடெல்லி: சுத்திகரிக்கப்பட்டு வெளியேற்றப்படும் சிறுநீர் மீண்டும் சிறுநீரகத்துக்கே திரும்புவதால், குழந்தையின் உயிரை காக்க, மாற்று ரத்த வகை கொண்ட சிறுநீரகத்தை அறுவை சிகிச்சை மூலம் பொருத்தி தனியார் மருத்துவமனை ஒன்று சாதனை செய்துள்ளது. தெற்காசியா மண்டலத்தை சேர்ந்த 3 வயது குழந்தை பிரதியுஷா. 10 கிலோ எடைகொண்ட இந்த குழந்தைக்கு, ‘ரிப்ளக்ஸ் நெப்ரோபதி’ என்ற அரியவகை நோய் பாதிப்பு இருந்தது. இதனால் சுத்திகரிக்கப்பட்டு வெளியேற்றப்படும் சிறுநீர் மீண்டும் சிறுநீரகத்தையே வந்தடைந்தது. இது குழந்தையின் உயிருக்கே ஆபத்து ஏற்படுத்தும் என்பதால், உடனடியாக சிறுநீரகத்தை மாற்ற மருத்துவர்கள் அறிவுறுத்தினர். இதற்காக சிறுநீரகம் தானம் கேட்டு விளம்பரம் செய்யப்பட்டது. ஆனால் விரைவில் நடத்தப்பட வேண்டிய இந்த சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு, குழந்தையின் ‘பி பாசிட்டிவ்’ ரத்த வகையை சார்ந்த சிறுநீரகம் கிடைக்கவில்லை. இதனால் தாயினுடைய சிறுநீரகத்தை குழந்தைக்கு பொருத்த ஆலோசிக்கப்பட்டது. எனினும் தாயின் ரத்த வகை ‘ஏ பாசிட்டிவ்’ என்பதால் அதில் சிக்கல் ஏற்பட்டது. வெவ்வேறு ரத்த வகை கொண்டவர்களுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடியாது. அவ்வாறு மேற்கொண்டால், மாற்றப்பட்ட சிறுநீரகத்தின் செயல்பாடு ஒருநாளில் கூட நின்றுவிடும் அபாயம் உள்ளது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் குழந்தையின் உயிரை காப்பாற்ற கருதிய என்சிஆர் மண்டலத்தில் உள்ள மேதாந்தா மருத்துவமனை, மருத்தவர்கள் அடங்கிய குழு அமைத்து தீவிர ஆலோசனை நடத்தியது.ஆலோசனை முடிவில், குழந்தையின் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட ரத்த வெள்ளை அணுக்களை நீக்க முடிவுசெய்தனர். அதனை தொடர்ந்து சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது. மருத்துவர்களின் இந்த சோதனை முயற்சி கடந்த ஏப்ரல் 5ம் தேதி நடைபெற்றது. இதில் மருத்தவர்கள் வெற்றியும் அடைந்துள்ளனர். இதுகுறித்து மருத்துவமனை சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நிபுணரும், மருத்துவருமான சிதார்த் சேதி வெளியிட்ட அறிக்கையில், ‘3 வயதான குழந்தைக்கு,வெவ்வேறு ரத்த வகை சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து மருத்துவமனை சாதனை படைத்துள்ளது. தெற்கு ஆசிய மண்டலத்தில்(சார்க்) குழந்தைக்கு இவ்வகையான அறுவை சிகிச்சை நடத்தியது இதுவே முதல்முறையாகும்’ என கூறி தனது மகிழ்ச்சியை தெரிவித்திருந்தார்.

மூலக்கதை