இனி தமிழில் பட பெயர் அவ்வளவு தானா...!

தினமலர்  தினமலர்
இனி தமிழில் பட பெயர் அவ்வளவு தானா...!

அட்லீ இயக்கத்தில் விஜய், சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கும் படத்தின் பெயர் 'மெர்சல்' என நேற்று மாலை அறிவித்தார்கள். சென்னைத் தமிழைப் பற்றித் தெரிந்தவர்களுக்குத்தான் 'மெர்சல்' என்பதன் அர்த்தம் தெரியும். 'மிரண்டு போய் விட்டேன், மிரட்டிட்டான், மிரட்டல்' எனச் சொல்வதைத்தான் 'மெர்சல்' என சொல்லுவார்கள்.

தமிழில் பெயர் வைக்கும் படங்களுக்கு வரி விலக்கு அளிக்கப்படும் என சில வருடங்களுக்கு முன்பு தமிழக அரசு அறிவித்தது. அதன் பின் தான் அனைவரும் தமிழ்ப் பற்றுடன் தமிழில் பெயர் வைக்க ஆரம்பித்தார்கள். விதிவிலக்காக சிலர் குறிப்பிட்ட பெயர்களை வைத்த படங்களுக்கும் வரி பெற்றார்கள்.

மத்திய திரைப்பட தணிக்கைத் துறை 'யு' சான்றிதழ் வழங்கினாலும், தமிழக அரசின் வணிவரித் துறை ஒரு குழுவை உருவாக்கி அதன் பின் படங்களைப் பார்த்து வரி விலக்கு அளித்து வந்தது. சில படங்கள் 'யு' சான்றிதழ் பெற்றாலும் வரி விலக்கு அளிக்கப்படாமல் இருந்தது. குறிப்பாக உதயநிதி ஸ்டாலின் தயாரித்த படங்களுக்கு வழங்கப்படாமலே இருந்தது. அதன் பின் அவர் நீதிமன்ற உதவியை நாடினார்.

வரும் ஜுலை மாதம் முதல் ஜிஎஸ்டி வரி அமல்படுத்தப்பட்டால் தமிழக அரசு அளிக்கும் வரிவிலக்கு தொடர வாய்ப்பில்லை என்றே சொல்லப்படுகிறது. அதனால், தற்போது தமிழ் சினிமாவில் தமிழ் அல்லாத பெயர்களை படங்களுக்கு வைப்பது ஆரம்பமாகிவிட்டது.
ஏற்கெனவே ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்திற்கு 'ஸ்பைடர்' என்றும், விக்ரம் நடிக்கும் படத்திற்கு 'ஸ்கெட்ச்' என்றும் தலைப்பு வைத்திருக்கிறார்கள். நேற்று விஜய் நடிக்கும் படத்திற்கு 'மெர்சல்' என்று தலைப்பை அறிவித்திருக்கிறார்கள். இனி, தமிழ் சினிமாவில் தமிழல்லாத ஆங்கிலத் தலைப்புகளையும் , தாறுமாறான தலைப்புகளையும் அதிகம் எதிர்பார்க்கலாம்.

தமிழ் சினிமாவில் தமிழ்ப் பற்று வரிவிலக்கோடு போய்விட்டது என்று சொல்லும் நிலை வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

மூலக்கதை