கோவையில் தாராளமாய் நடக்குது விற்பனை லாட்டரி; வீடு வீடாக... 'டோர் டெலிவரி!' பேருக்கு நடக்குது தடுப்பு நடவடிக்கை

தினமலர்  தினமலர்
கோவையில் தாராளமாய் நடக்குது விற்பனை லாட்டரி; வீடு வீடாக... டோர் டெலிவரி! பேருக்கு நடக்குது தடுப்பு நடவடிக்கை

லாட்டரி விற்பதற்கு தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், கோவையின் முக்கிய இடங்களில் எப்போதும் தாராளமாக லாட்டரிகள் புழங்குகின்றன. அதிலும், தற்போது குடியிருப்பு பகுதிகளில் வீடுவீடாக 'டோர் டெலிவரி' செய்யும் அளவிற்கு லாட்டரி புழக்கம் அதிகரித்திருக்கிறது.ரகசிய வீடியோ...கடந்த, 2005ம் ஆண்டில், தமிழகத்தில் லாட்டரி சீட்டுகளுக்கு தடை விதித்தார் அன்றைய முதல்வர் ஜெயலலிதா. 'பல குடும்பங்கள், குருட்டு அதிர்ஷ்டத்தை நம்பி சீரழிகின்றன. இது ஏழைகளின் பொருளாதாரத்தை நேரடியாக பாதிக்கிறது' என, அரசு தரப்பில், லாட்டரி தடைக்கு காரணம் கூறப்பட்டது.ஆனால், பக்கத்து மாநிலமான கேரளாவில், இன்று வரையிலும் லாட்டரிக்கு தடையில்லை. எனவே, கேரளத்தின் எல்லையில் இருக்கும் கோவைக்கு, லாட்டரி சீட்டுகளை கடத்தி வந்து விற்பது, தங்குதடையின்றி நடக்கிறது. கோவை புலியகுளம் அருகே உள்ள தாமுநகரில், குடியிருப்புகளில் வீடுவீடாக பால் பாக்கெட்கள் வினியோகிப்பது போல், லாட்டரி விற்கப்படுவது குறித்த ஒரு வீடியோ, சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.வீடியோவில் ஒரு நபர், கட்டுக்கட்டாக லாட்டரி சீட்டுகளை எடுத்து ஒரு சீட்டு நுாறு ரூபாய் எனக்கூவி விற்பனை செய்கிறார். பின்னர் அவர், இருசக்கர வாகனத்தில் ஏறி அடுத்த தெருவுக்குள்ளும் இதே போல் லாட்டரி விற்கச் செல்கிறார். அவரது வாகனத்திலும், கட்டுக்கட்டாக லாட்டரிச் சீட்டுகளை வைத்திருப்பதும் அந்த ரகசிய வீடியோவில் பதிவாகியுள்ளது.வீடியோ எடுத்தவர், லாட்டரி வாங்கியவரிடம், 'பணம் விழுகிறதா?' என்று கேட்கிறார். 'ஓ... அதெல்லாம், அப்பப்போ விழுது' என்று அவர் பதில் சொல்கிறார். இந்த உரையாடலால், தமிழகத்தில் தடை செய்யப்பட்டுள்ள லாட்டரி சீட்டுகள், கோவை குடியிருப்புப் பகுதிகளில், பல மாதங்களாக சாதாரணமாக 'டோர் டெலிவரி' செய்யப்படுவது உறுதியாகிறது.கட்டுக்குள் இல்லைகோவை மாநகரில், மதுக்கரை, குனியமுத்துார், சுந்தராபுரம், உக்கடம், காந்திபுரம், சிங்காநல்லுார், கணபதி, ஆர்.எஸ்.புரம், சரவணம்பட்டி, கவுண்டம்பாளையம் மற்றும் ராமநாதபுரம் என்று நகரின் முக்கியப்பகுதிகளில் இந்த தடை செய்யப்பட்ட லாட்டரிகள் சகஜமாகப் புழங்குகின்றன.அவ்வப்போது, போலீசார் லாட்டரிகள் புழக்கத்தை கட்டுப்படுத்த அதிரடி நடவடிக்கை எடுப்பதாகவும், லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்வதாகவும், விற்போரை கைது செய்வதாகவும் செய்திகள் வருவதுண்டு. ஆனால், இந்த நடவடிக்கைகளால் லாட்டரி விற்பனை கட்டுக்குள் வந்ததாகத் தெரியவில்லை.இருசக்கர வாகனத்தில் கட்டுக்கட்டாக கொண்டு வந்து வீடுவீடாக லாட்டரி விற்கப்படுவதைப் பார்த்தால், போலீசாரின் நடவடிக்கை வெறும் கண்துடைப்புக்காக மட்டுமே என்பது தெரியவருகிறது.'வாட்ஸ் ஆப்'பில்...நகரில், பஜார்களில் உள்ள பெட்டிக்கடைகள், சிறு ஹோட்டல்கள், தொழிலாளர்கள் அதிகம் கூடுகிற இடங்கள், மைதானங்களை ஒட்டியிருக்கிற இடங்களில் லாட்டரி விற்பனை துாள் பறக்கிறது. நேரடியாக லாட்டரி சீட்டுகளை விற்பதுக்கு பதில், துண்டு சீட்டுகளில் நம்பர்களை எழுதித்தருவது; செல்போன்கள் வழியாக லாட்டரி எண்களை குறுந்தகவல் அனுப்புவது; 'வாட்ஸ் ஆப்' குழுக்கள் மூலம், சீட்டுகளை படமெடுத்து விற்பது என, பலவித நவீன தொழில்நுட்ப வசதிகளை கையாண்டும் லாட்டரி விற்பனை ஜோராக நடக்கிறது.ஒரு நம்பர் லாட்டரி என்றால், ரூ.10 லாட்டரிக்கு, ஒரு லட்சம் ரூபாய் முதல் பரிசு; ரூ.20 லாட்டரிக்கு, ரூ.10 லட்சம் முதல் பரிசு; ரூ.50 லாட்டரிக்கு, ரூ.3.5 லட்சம் முதல் பரிசு; ரூ.100 லாட்டரி என்றால், ஒரு கோடி ரூபாய் முதல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.இதில், 'வின்வின், தனஸ்ரீ, பவுர்ணமி, காருண்யா, சொர்ண லட்சுமி, திவ்யலட்சுமி, சிக்கிம், மணிப்பூர்' என்ற பெயரில் பலவித லாட்டரிகள் கோவையில் விற்கப்படுகின்றன. இவை தவிர, நம்பர் லாட்டரிகளில் மூணு நம்பர் லாட்டரி, 2 நம்பர் லாட்டரி, 5 நம்பர் லாட்டரி போன்றவை துண்டு அட்டைகளில் வலம் வருகின்றன.இதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், 'மாநகரில் ஏற்கனவே சட்டவிரோத லாட்டரி விற்பனையை கட்டுக்குள் வைக்க, பல அதிரடி நடவடிக்கைகள் எடுத்துள்ளோம்; பலரை கைது செய்திருக்கிறோம். கேரளாவிலிருந்து பஸ், இரு - நான்கு சக்கர வாகனங்களில் லாட்டரி சீட்டுகள் கொண்டு வருகின்றனர். அவற்றை பறிமுதல் செய்வது சிரமமாக உள்ளது. பஸ் பயணி போல் கடத்தி வந்து விற்கின்றனர். இருப்பினும் லாட்டரி விற்பனையை தடுக்க, கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்' என்றார்.லாட்டரிகளை கட்டடத் தொழிலாளிகள், சிறு வியாபாரிகள், தினக் கூலி உடல் உழைப்பாளர்களே பெரிதும் வாங்குகின்றனர். இதனால், அவர்களது பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்படுகிறது. லாட்டரி விற்பனையை கட்டுப்படுத்த கடும் நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்றால், ஏழைகள் மேலும் மேலும் ஏழைகளாக்கப்படுவதும், அவர்களது குழந்தைகள் வேறு வேலைகளுக்குச் செல்லும் கல்வித் தரத்தை எட்ட முடியாமல், கூலித் தொழிலாளர்களாகவே வாழ்ந்து மடிவது நிச்சயம்.
போலீசுக்கு தெரிந்துதான்!'எப்படி கோவைக்குள் லாட்டரிகள் கொண்டு வரப்படுகிறது. எந்தெந்த இடங்களில், எந்தெந்த குழுக்கள் லாட்டரி விற்பனையில் ஈடுபடுகின்றன என்கிற விபரம் அனைத்தும் போலீசாருக்கு தெரியும். அவ்வப்போது, 'லாட்டரி விற்பனை; இருவர் கைது' என்ற செய்திகள் நாளிதழில் வெளிவருவதன் மூலம் போலீசார் நடவடிக்கை எடுப்பதாகக் காட்டிக் கொள்கின்றனர். உண்மையில், ஏழைகள் கடினமாக உழைத்து பெற்ற பணத்தை அபகரிக்கும் லாட்டரி விற்பனையாளர்களுடன் போலீசார் கைகோர்த்திருப்பது வேதனை அளிக்கிறது. போலீஸ் உயர் அதிகாரிகள் தலையிட்டு, தனிப்படைகள் அமைத்து, கடும் நடவடிக்கைகள் எடுப்பதன் மூலமே கோவையில் லாட்டரி விற்பனையை ஒழிக்க முடியும்' என, சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

- நமது நிருபர் -

மூலக்கதை