முழங்காவில் பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்ட தாயக மக்கள்

PARIS TAMIL  PARIS TAMIL
முழங்காவில் பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்ட தாயக மக்கள்

முழங்காவில் பொலிஸ் நிலையம் அந்தப் பகுதி மக்களால் முற்றுகையிடப்பட்டுள்ளது. 
 
கிளிநொச்சி - கரியாலைநாகபடுவான் அந்தோனியார் தேவாலயத்துக்கு முன்பாக, இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில், நடவடிக்கை எடுக்காமையை கண்டித்து இந்த முற்றுகை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
 
300க்கும்  மேற்பட்ட  கிராம மக்கள், மதத் தலைவர்கள் மற்றும் பொது அமைப்புகள் ஒன்றாகச் சேர்ந்து பொலிஸ் நிலையத்தை இன்று முற்றுகை இட்டனர். 
 
நாச்சிக்குடா சந்தியில் இருந்து முழங்காவில் பொலிஸ்  நிலையம் வரை பேரணியாகச் சென்று பொலிஸ் நிலையத்தை  முற்றுகை இட்டனர். 
 
கடந்த 17ம் திகதி கிளிநொச்சி - கரியாலைநாகபடுவான் அந்தோனியார் தேவாலயத்துக்கு முன்பாக, இடம்பெற்ற வாகன விபத்தில் சிறுவன் ஒருவர் படுகாங்களுக்கு உள்ளானார். கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்தார்.
 
முழங்காவில் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்று வந்த அ.அபினாஸ் (வயது 12) என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான்.
 
அந்தோனியார் தேவாலயத்தின் திருவிழாவில் கலந்துகொள்வதற்காக ஏ-32 வீதியோரத்தில் சென்று கொண்டிருந்த சிறுவனைப் பின்புறமாகச் சென்றுகொண்டிருந்த கார் மோதிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளது.
 
குறித்த விபத்துத் தொடர்பில் முழங்காவில் பொலிஸ் நிலையத்தில் குடும்பத்தினரால் முறைப்பாட்டு செய்யப்பட்டிருந்ததுடன் தப்பி ஓடிய காரின் ஓர் இலக்கத்தகடு வீழ்ந்த நிலையில் அதன் இலக்கமும் பொலிஸாருக்கு வழங்கப்பட்டிருந்தது.
 
இது தொடர்பாக, இதுவரை  தகுந்த நடவடிக்கை எதையும் பொலிஸார் எடுக்காததைக் கண்டிக்கும் முகமாகவே, கிராம மக்களால் இன்று (22) பொலிஸ் நிலையம் முற்றுகை இடப்பட்டது. 
 
இதனை அடுத்து, அங்கு வருகைதந்த உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்,  சந்தேகநபரைக் கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் இன்று சந்தேகநபர் கட்டாயம் கைது செய்யப்படுவார் என்றும் உறுதியளித்தார்.
 
அவரின் வாக்குறுதிக்கு அமைய முற்றுகை போராட்டம் மக்களால் கைவிடப்பட்டது.

மூலக்கதை