கத்தாரில் தவிக்கும் இந்தியர்களை மீட்க சிறப்பு விமானங்களை இயக்க மத்திய அரசு முடிவு

தினகரன்  தினகரன்

டெல்லி: கத்தாரில் சிக்கித் தவித்து வரும் இந்தியர்களை பத்திரமாக தாயகம் அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது. தீவிரவாதிகளுக்கு உதவுவதாக குற்றம்சாட்டி கத்தார் நாட்டினுடனான ராஜிய உறவுகளை சவுதி அரேபியா, பஹ்ரைன், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட 7 அரபு நாடுகள் முறித்து கொண்டுள்ளன. கத்தார் தனிமைபடுத்தப்பட்டிருப்பதால் அங்கு வசிக்கும் இந்தியர்கள் தவித்து வருகின்றனர். கத்தாரில் சுமார் 7 லட்சம் இந்தியர்கள் வசிக்கின்றனர். அவர்களை தாயகத்திற்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. இதற்காக கூடுதல் விமானங்களை இயக்க வேண்டும் என்று வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், விமான போக்குவரத்து துறை அமைச்சர் அசோக் கஜபதி ராஜூவை கேட்டுக்கொண்டுள்ளார். அதன்படி கேரளா - தோஹா இடையே சிறப்பு விமனங்கள் வரும் 25-ம் தேதி முதல் ஜூலை மாதம் 8-ம் தேதி வரை இயக்கப்பட இருப்பதாக விமான போக்குவரத்து துறை அமைச்சகம் கூறியுள்ளது. அதே போல மும்பை - தோஹா இடையே ஜெட் ஏர்வேஸ் விமானங்கள் இயக்கப்படுகிறது. இந்தியர்களை தாயகம் கொண்டு வர தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று மத்திய அரசு உறுதியளித்துள்ளது.

மூலக்கதை