'வனமகன்' கடைசி வரி விலக்கு படம் ?

தினமலர்  தினமலர்
வனமகன் கடைசி வரி விலக்கு படம் ?

தமிழ்த் திரையுலகில் ஜிஎஸ்டி வரி விதிப்பு எந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது என்பது அடுத்த பத்து நாட்களுக்குள் தெரிய வரும். 100 ரூபாய்க்கு அதிகமாக உள்ள டிக்கெட் கட்டணங்களுக்கு 28 சதவீத ஜிஎஸ்டி வரிவிதிப்பும், 100 ரூபாய்க்குக் குறைவாக உள்ள டிக்கெட் கட்டணங்களுக்கு 18 சதவீத ஜிஎஸ்டி வரிவிதிப்பும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு தமிழ்ப் படங்களுக்கு வரி விலக்கு என்று அறிவித்ததிலிருந்து 'யு' சான்றிதழ் பெறும் படங்கள் வரி விலக்கு பெற்று கேளிக்கை வரியிலிருந்து தப்பித்து வந்தன.
தற்போது ஜிஎஸ்டி வரிவிதிப்பு ஜுலை 1ம் தேதி வர உள்ளதால் அடுத்த வாரம் ஜுன் 30ம் தேதி வெளியாக உள்ள படங்களுக்கு தமிழக அரசு வரி விலக்கு அளிக்க வாய்ப்பில்லை. அதற்கு மறுநாளே ஜுலை 1ம் தேதி வந்துவிடுவதால் ஜிஎஸ்டி வரி விதிப்பில் அந்தப் படங்கள் வந்துவிடும்.
ஜுலை 1ம் தேதி முதல் மல்டிபிளக்ஸ் தியேட்டர் கட்டணங்கள், சிங்கிள் தியேட்டர் கட்டணங்கள், என அந்தந்த பகுதிக்கேற்றபடி எப்படி டிக்கெட் கட்டணங்களை நிர்ணயிக்கப் போகிறார்கள் என்பது இன்னும் தெளிவாகவில்லை.
இந்த சூழ்நிலையில் நாளை வெளியாக உள்ள படங்களில் 'வனமகன்' படம் 'யு' சான்றிதழ் பெற்ற படம் என்பதால் அந்தப் படத்திற்கு தமிழக அரசின் கேளிக்கை வரி அளிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஒரு வாரத்திற்குள் வசூலாகும் தொகை அந்தப் படத்திற்கு உதவியாக இருக்கும். 'அன்பானவன் அசராதவன் அடங்காவதன்' படம் 'யுஏ' படம் என்பதால் வரி விலக்கு இல்லை.
ஆக, 'வனமகன்' படம்தான் தமிழக அரசால் கடைசியாக வரி விலக்கு பெற்ற படம் என்ற பெருமையைத் தக்க வைத்துக் கொள்ளும் வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளது.

மூலக்கதை