ஜிஎஸ்டி வரி விதிப்பால் ரயிலில் ஏசி, முதல் வகுப்பு கட்டணங்கள் உயர வாய்ப்பு!

தினகரன்  தினகரன்

ஜிஎஸ்டி வரி அமல்படுத்தப்படவுள்ளதால் ரயிலில் ஏசி மற்றும் முதல் வகுப்புகளுக்கான கட்டணம் சற்று உயரும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. நாடு முழுவதும் ஒரே சீரான வரி விதிப்பை உறுதி செய்வதற்காக ஜிஎஸ்டி வரியை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஜிஎஸ்டி வரி விதிப்பானது, ஜூலை 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளது. இந்த வரி விதிப்பில் டிக்கெட் கட்டணம் மீதான சேவை வரி 4.5 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. எனவே, ஜிஎஸ்டி வரி அமலாவதால் ரயிலில் ஏசி மற்றும் முதல் வகுப்புகளுக்கான கட்டணம் சற்று உயரும் என ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து ரயில்வே அமைச்சக அதிகாரி ஒருவர் கூறியதாவது, ரயிலின் ஏசி மற்றும் முதல் வகுப்புகளுக்கு மட்டும் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்தக் குறிப்பிட்ட வகுப்புகளுக்கான டிக்கெட் கட்டணங்கள் மீதான சேவை வரி 4.5 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக, அந்த வகுப்புகளுக்கான ரயில் கட்டணங்கள் சற்று அதிகரிக்கும். அதாவது, குறிப்பிட்ட வகுப்புகளுக்கு ரூ.2000 கட்டணம் செலுத்தி வந்தவர்கள், ஜூலை 1-ம் தேதிக்கு பிறகு ரூ.2010 செலுத்த வேண்டியிருக்கும் என அந்த அதிகாரி தெரிவித்தார்.

மூலக்கதை