அரசியல் மரபை மீறி சவுதியில் கிரீட இளவரசர் நியமனம் : மன்னரின் நடவடிக்கையால் மேற்காசியாவில் ஆச்சர்யம்

தினகரன்  தினகரன்

சவுதி: சவுதி அரேபியாவின் கிரீட இளவரசராக மன்னர் சல்மானின் மூன்றாவது மனைவியின் மூத்த மகன் முகம்மது பின் சல்மான் நியமிக்கப்பட்டிருப்பது மேற்காசியாவில் அரசியல் ஆச்சர்யங்களை ஏற்படுத்தியுள்ளது. சவுதி அரேபியாவில் கிரீட இளவரசரே எதிர்கால மன்னராக இருப்பார். மன்னர் சல்மானின் நெருங்கிய உறவினரான முகம்மது பின் நயீஃப் கிரீட இளவரசராக இருந்தார். ஆனால் யாருமே எதிர்பாராத வகையில் இளவரசர் பதவியில் இருந்து முகமது பின் நயீப் நீக்கப்பட்டார். மன்னர் சல்மான் தமது மூன்றாவது மனைவியின் மூத்த மகனான முகம்மது பின் சல்மானை, கிரீட இளவரசராக அறிவித்துள்ளார். இது அரச குடும்பத்தில் சிறு சலசலப்பை ஏற்படுத்தினாலும் அவர்கள் புனித மெக்காவில் நடந்த நிகழ்ச்சியில் புதிய இளவரசருக்கு வாழ்த்து தெரிவித்தனர். புதிய இளவரசரை தேர்வு செய்வது தொடர்பாக மெக்காவில் உள்ள அல் சபா மாளிகையில் சவுதி அரசரின் வாரிசு குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மொத்தமுள்ள 34 உறுப்பினர்களில் 31 பேர் மன்னரின் மூத்த மகன் முகமது பின் சல்மானுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதனையடுத்து, முகமது பின் சல்மானை புதிய இளவரசராக அவரது தந்தையும் சவுதி அரசருமான சல்மான் பின் அப்துலாசிஸ் அல் சவுத் நியமித்தார்.  முகம்மது பின் சல்மான் தற்போது சவுதியின் பாதுகாப்பு,பெட்ரோலியம் மற்றும் பொருளாதார துறை அமைச்சர் பொறுப்புகளை வகித்து வருகிறார். சவுதி அரச பரம்பரையில் மன்னரின் புதல்வர்கள் ஒருவர் பின் ஒருவராக அரச பதவியை ஏற்றுக் கொள்வது வழக்கம். அந்த வகையில் சல்மான் பின் அப்துல் அசீஸ் தற்போது மன்னராக உள்ளார். இந்நிலையில் முதல் சகோதரரின் மகன் கிரீட இளவரசராக இருந்ததை மாற்றி, சொந்த மகனுக்கு அதனை வழங்கியுள்ளார் மன்னர் அப்துல் அசீஸ். முகம்மது பின் சுல்தான் தனது வாரிசை கிரீட இளவரசராக நியமிக்க மாட்டார் என்ற உத்தரவாதமும் அறிவிக்கப்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியால் சவுதி பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கத்தார் உள்ளிட்ட பிரச்சனைகளால் அரசியல் தேக்கம் ஏற்பட்டுள்ள நிலையில், திறமையானவர் என கருதப்படும் முகம்மது பின் சல்மானுக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.     

மூலக்கதை