ஜிஎஸ்டி மசோதாவுக்கு அனுமதி தர காஷ்மீர் அரசு தொடர்ந்து மறுப்பு: ஜூலை 1 முதல் அமல்படுத்துவதில் சிக்கல் வருமா?

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஜிஎஸ்டி மசோதாவுக்கு அனுமதி தர காஷ்மீர் அரசு தொடர்ந்து மறுப்பு: ஜூலை 1 முதல் அமல்படுத்துவதில் சிக்கல் வருமா?

புதுடெல்லி: காஷ்மீர் மாநிலம் தவிர்த்து இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மாநில ஜிஎஸ்டி மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பல்வேறு வரி விதிப்புகளுக்கு பதிலாக ஒரே பெயரில் சமச்சீரான வரிவிதிப்பை உறுதி செய்யும் வகையில் ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு சேவை வரியை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.

இந்த புதிய வரி விதிப்பு முறை வரும் ஜூன் 30 நள்ளிரவு முதல் நாடு முழுவதும் ஒரே நேரத்தில் அமல் செய்யப்பட இருக்கிறது. இதற்காக நாடாளுமன்றத்தின் மைய ஹாலில் சிறப்பு கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில் ஜனாதிபதி, பிரதமர், முன்னாள் பிரதமர்கள், அனைத்து மாநில முதல்வர்கள்  மற்றும் எம்பிக்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள். இதற்கிடையில் ஜிஎஸ்டியை அமல்படுத்த மத்திய ஜிஎஸ்டி தவிர அனைத்து மாநிலங்களிலும் தனித்தனியாக மாநில ஜிஎஸ்டி சட்டம ்நிறைவேற்ற வேண்டியது அவசியமாகிறது.

இதன் அடிப்படையில் பாஜ ஆளும் மாநிலங்கள் மட்டும் அல்லாது எதிர்கட்சி வரிசையில் உள்ள காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், பிஜூ ஜனதா தளம் ஆளும் மாநிலங்களிலும் மாநில ஜிஎஸ்டி மசோதா ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் மம்தா தலைமையிலான மேற்கு வங்கம் மற்றும் இடதுசாரி கூட்டணி ஆட்சியில் உள்ள கேரளாவிலும் சட்டமசோதாவுக்கு பதிலாக அவசர சட்டம் வாயிலாக ஜிஎஸ்டிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்திலும் சில தினங்களுக்கு முன்பு குரல் வாக்கெடுப்பு வாயிலாக இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மட்டும் இதுவரை இந்த சட்டம் நிறைவேற்றப்படவில்லை.

அங்கு மக்கள் ஜனநாயக கட்சி மற்றும் பாஜ கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. எதிர்கட்சி வரிசையில் தேசிய மாநாட்டு கட்சி மற்றும் காங்கிரஸ் உள்ளது.   இங்கு  ஜிஎஸ்டியை அமல்படுத்த தேசிய மாநாட்டு கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அதிகாரம் இருப்பதால் ஜிஎஸ்டி மசோதாவை நிறைவேற்ற அனைத்து கட்சிகளின் ஆதரவு தேவை. இதனால் இங்கு இந்த மசோதா இன்னும் நிறைவேறாமல் உள்ளது.

ஜிஎஸ்டி அமல்படுத்தாத மாநிலங்களுக்கு ஏற்படும் நிதி இழப்பை மத்திய அரசு சரிகட்டாது என மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி ஏற்கனவே திட்டவட்டமாக தெரிவித்து விட்டார்.

ஜம்மு காஷ்மீரில் ஜிஎஸ்டி மசோதா நிறைவேற்றா விட்டாலும் வரும் ஜூலை 1 முதல் நாடு முழுவதும் ஜிஎஸ்டி வரிவிதிப்பை அமல்படுத்துவதில் எந்த தடையும் இல்லை என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

.

மூலக்கதை