ஜனாதிபதி தேர்தலில் பாஜவுக்கு ஆதரவு: ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஜனாதிபதி தேர்தலில் பாஜவுக்கு ஆதரவு: ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு

சென்னை: ஜனாதிபதி தேர்தலில் பாஜ வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவு தெரிவிப்பதாக ஓ. பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு தெரிவிப்பது என்பது குறித்து அதிமுக புரட்சி தலைவி அம்மா அணி சார்பில் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

இக்கூட்டத்தில் கட்சியின் மூத்த நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்கள், 12 எம்பிக்கள், 11 எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர். சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக இந்த ஆலோசனை கூட்டம் நடந்தது.   இக்கூட்டத்தில், பாஜ சார்பில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ராம்நாத் கோவிந்தை ஆதரிப்பது என்று ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டது.


ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் ஓ. பன்னீர் செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது: பாஜ சார்பில் தலித் சமூகத்தை சேர்ந்தவரும், 2 முறை எம்பியாக மற்றும் ஆளுநராக பணியாற்றியவருமான ராம்நாத் கோவிந்த் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். பாஜ தேசிய தலைவர் அமித்ஷா தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டு கொண்டதன் பேரில் ஜனாதிபதி வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு எங்களது ஆதரவை தெரிவிப்பது என்று ஒரு மனதாக முடிவு செய்துள்ளோம்.

விரைவில் டெல்லி சென்று பிரதமர் மோடியை நேரில் சந்தித்து எங்களது ஆதரவை தெரிவிப்போம். கட்சி தினகரனுக்கு, ஆட்சி எடப்பாடிக்கு என்று அன்வர்ராஜா எம்பி கூறியது அவரது தனிப்பட்ட கருத்து.

இவ்வாறு ஓ. பன்னீர்செல்வம் கூறினார்.

.

மூலக்கதை