வேகமெடுக்கும் 'விவேகம் - சர்வைவா' பாடல்

தினமலர்  தினமலர்
வேகமெடுக்கும் விவேகம்  சர்வைவா பாடல்

சபாஷ், சரியான போட்டி... ஆரம்பமாகிவிட்டது. 'மெர்சல்' என மாஸ் தலைப்பு விஜய் படத்திற்கு வைக்கப்பட்டுள்ளதாக அவருடைய ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்துவிட்டார்கள். 'தெறி' படத்தின் பெயர் வைக்கும் போது கூட என்ன இது தலைப்பு என்று சொன்னவர்கள் கூட அதன்பின் அது விஜய் படத்திற்கு பொருத்தமான தலைப்பு என சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். இப்போது 'மெர்சல்' தலைப்பு விஜய் ரசிகர்களை மொத்தமாகவே ஈர்த்துவிட்டதால் ஒரு முதல் பார்வை, இரண்டாம் பார்வை ஆகிய இரண்டு போஸ்டர்களை மட்டும் வைத்துக் கொண்டு சமூக வலைத்தளங்களை 'மெர்சல்' ஆக்கி வருகிறார்கள்.

'மெர்சல்' அலையில் நேற்று முன்தினம் வெளியான 'விவேகம்' படத்தின் 'சர்வைவா...' பாடலின் சத்தம் கொஞ்சம் குறைந்து போனது. நேற்று டுவிட்டர் 'டைம் லைன்' முழுவதும் மெர்சல் போஸ்டர்களாகவே நிறைந்திருந்தது என பல பிரபலங்கள் டுவீட் செய்தார்கள்.

அஜித் ரசிகர்களுக்கு அது நிச்சயம் கடுப்பாக இருந்திருக்கும். அதனால், 'விவேகம்' படத்தின் 'சர்வைவா..' பாடலை இன்னும் சாதனை புரிய வைக்க வேண்டும் என பரபரப்பாகியுள்ளார்கள். நேற்று முன் தினம் மாலை வெளியான அந்த லிரிக் வீடியோ இப்போது 15 லட்சம் பார்வைகளை யு டியூபில் கடந்துள்ளது.

'மெர்சல்' பாடல் வருவதற்கு இன்னும் ஒரு மாத காலம் இருப்பதால் 'சர்வைவா..' பாடலை அதற்குள் எங்கோ கொண்டு போக முடிவு செய்திருப்பார்கள். ஆனாலும், 'மெர்சல்' படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசை என்பது அவர்களை நிறையவே யோசிக்க வைத்திருக்கும்.

சிம்பு போன்ற நடிகர்கள் படங்களுக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்தாலே கோடிகளைத் தொடும். விஜய் படம் என்றால் சொல்லவே வேண்டாம். தீபாவளி வரை இனி தினமும் சமூக வலைத்தளங்களில் பட்டாசு சத்தத்திற்கு குறையிருக்காது.

மூலக்கதை