இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக ரவி சாஸ்திரி நியமிக்கப்பட அதிக வாய்ப்பு..! : காரணம் விராட் கோலி

தினகரன்  தினகரன்

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக ரவி சாஸ்திரி நியமிக்கப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சாம்பியன்ஸ் ட்ராபியுடன் கும்ப்ளேவின் ஒப்பந்த காலம் முடிவுக்கு வரவிருந்த நிலையில், அதற்கடுத்த மேற்கிந்திய தீவுகளுடனான தொடருக்கும் அவர் தலைமை பயிற்சியாளராக நியமிப்பார் என BCCI அறிவித்தது. ஆனால் அணியுடன் செல்லாமல் லண்டனிலேயே தங்கியுள்ள கும்ப்ளே, திடீரென பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். பயிற்சியாளராக தாம் தொடர கேப்டன் கோலி விரும்பவில்லை என வெளிப்படையாகவே அவர் தனது விளக்கத்தில் கூறியிருந்தார். இதனிடையே இலங்கை சுற்றுப் பயணத்திற்கு முன்பாக புதிய பயிற்சியாளர் தேர்வு செய்யப்படுவார் என BCCI  தெரிவித்துள்ளது. இதுகுறித்து பேசிய பிசிசிஐ இடைக்காலத் தலைவர் சி.கே.கன்னா, கிரிக்கெட் ஆலோசனைக்குழு பெயரை இறுதி செய்த பின், புதிய பயிற்சியாளர் அறிவிக்கப்படுவார் என தெரிவித்தார். அடுத்த உலககோப்பை வரை அதாவது 2019 ஜுன் மாதம் வரை அவரது பதவிக்காலம் இருக்கும் என்றார். பயிற்சியாளர் பதவிக்கு கும்ப்ளே முன்னதாக வி்ண்ணப்பித்து இருந்ததால் சேவாக், டாம் மூடி,ரிச்சர்ட் பைபஸ் உள்ளிட்ட சிலர் மட்டுமே விண்ணப்பித்து இருந்தனர். எனவே விண்ணப்ப காலத்தை நீட்டிக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது. இந்திய அணியின் புதிய பயிற்சியாளர் பதவிக்கு அணியின் முன்னாள் இயக்குநர் ரவி சாஸ்திரி நியமிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. கேப்டன் விராட் கோலியின் தேர்வும் ரவி சாஸ்திரி என்பதே அதற்கு காரணம்.     

மூலக்கதை