சவுதி அரேபியாவில் பட்டத்து இளவரசராக மகனை நியமித்தார், மன்னர் சல்மான்

PARIS TAMIL  PARIS TAMIL
சவுதி அரேபியாவில் பட்டத்து இளவரசராக மகனை நியமித்தார், மன்னர் சல்மான்

எண்ணெய் வளமிக்க சவுதி அரேபியாவில் மன்னராக இருந்து வந்தவர் அப்துல்லா பின் அப்துல் அஜிஸ். இவர் 2015–ம் ஆண்டு, ஜனவரி 23–ந் தேதி மரணம் அடைந்தார். அதைத் தொடர்ந்து, அவரது ஒன்றுவிட்ட சகோதரர் சல்மான் மன்னர் ஆனார்.

சல்மான் மன்னர் ஆனதைத் தொடர்ந்து, இளவரசர் முகமது பின் நயேப்பை பட்டத்து இளவரசராகவும், இளவரசர் முகமது பின் சல்மானை பட்டத்து துணை இளவரசராகவும் நியமித்தார்.

அதிரடி திருப்பம்

இந்த நிலையில் அதிரடி திருப்பமாக, தனது மகனும், பட்டத்து துணை இளவரசருமான முகமது பின் சல்மானை (வயது 31), பட்டத்து இளவரசராக நியமித்து மன்னர் சல்மான் உத்தரவிட்டார்.

மேலும் பட்டத்து இளவரசராக இருந்த முகமது பின் நயேப், உள்துறை மந்திரி பதவி வகிப்பார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பட்டத்து இளவரசராக நியமிக்கப்பட்டுள்ள முகமது பின் சல்மான், நாட்டின் துணைப்பிரதமராகவும் இருப்பார். அவர் தொடர்ந்து ராணுவம், எண்ணெய் உள்ளிட்ட துறைகளின் பொறுப்பையும் கவனிப்பார்.

31 பேர் ஆதரவு

முகமது பின் சல்மானுக்கு பதவி உயர்வு வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு சவுதி அரேபியாவில் சமீப காலமாக நிலவி வந்தது. இருந்தபோதும், கத்தாருடனான தூதரக உறவினை சவுதி அரேபியாவும், அதன் நட்பு நாடுகளும் முறித்துக்கொண்டுள்ள பதற்றமான சூழலில், இந்தப் பதவி உயர்வு அவருக்கு வழங்கப்பட்டிருப்பது அங்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

இது தொடர்பாக பிறப்பிக்கப்பட்டுள்ள மன்னரின் கட்டளையில், ‘‘மன்னர் சல்மான் எடுத்த இந்த முடிவுக்கு ஆளும் அல் சவுத் குடும்பத்தின் மூத்த உறுப்பினர்களை கொண்ட விசுவாச கவுன்சிலில் 34 பேரில் 31 பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்’’ என கூறப்பட்டுள்ளது.

பறிக்கப்பட்டவரும் ஆதரவு

தன்னிடம் இருந்த பட்டத்து இளவரசர் பதவியைப் பறித்து, முகமது பின் சல்மானுக்கு கொடுத்துள்ள போதிலும், அவருக்கு தனது ஆதரவையும், விசுவாசத்தையும் முகமது பின் நயேப் தெரிவித்தார்.

அவருக்கு பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் பதில் அளித்தபோது, ‘‘உங்களின் வழிகாட்டுதலையும், அறிவுரையையும் பெறாமல் விட்டு விட மாட்டோம்’’ என குறிப்பிட்டார்.

நிச்சயமற்ற நிலை மாறியது

இந்த மாற்றத்தின் காரணமாக, வாரிசுரிமை தொடர்பான நிச்சயமற்ற தன்மை முடிவுக்கு வந்துள்ளதாகவும், முகமது பின் சல்மான் தன் திட்டப்படி, சவுதி அரேபிய ராஜ்யம், எண்ணெய்யை சார்ந்திருப்பதை குறைத்துக்கொள்ளவும், விரைவாக செயல்படவும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

சவுதி அரேபியாவில் துணை பட்டத்து இளவரசராக இருந்து வந்த முகமது பின் சல்மான், பட்டத்து இளவரசராக நியமிக்கப்பட்டுள்ளபோதிலும், துணை பட்டத்து இளவரசராக யாரும் நியமிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை