பெல்ஜியம் ரெயில் நிலையத்தில் குண்டு வெடிப்பு பயங்கரவாதி சுட்டுக்கொலை

PARIS TAMIL  PARIS TAMIL
பெல்ஜியம் ரெயில் நிலையத்தில் குண்டு வெடிப்பு பயங்கரவாதி சுட்டுக்கொலை

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பெல்ஜியம் நாட்டின் தலைநகர் பிரசெல்சில் மத்திய ரெயில் நிலையம் உள்ளது. நேற்று முன்தினம் மாலை இந்த ரெயில் நிலையம் வழக்கம் போல் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது.

அப்போது அங்கு வந்த பயங்கரவாதி ஒருவர் திடீரென ஒரு குண்டை வெடிக்கச்செய்தார். அது பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதனால் ரெயில் நிலையத்துக்குள் பெரும் பதற்றம் தொற்றிக்கொண்டது. பயணிகள் அனைவரும் உயிர் பிழைப்பதற்காக ஓலமிட்டபடி நாலாபுறமும் ஓட்டம் பிடித்தனர்.

இருப்பினும் அதிர்ஷ்டவசமாக இந்த குண்டுவெடிப்பில் உயிர் இழப்போ யாருக்கும் காயமோ ஏற்படவில்லை. இதற்கிடையே குண்டுவெடித்த சத்தம் கேட்டதும் ரெயில் நிலையத்தில் பாதுகாப்புபணியில் ஈடுபட்டிருந்த ராணுவவீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பயங்கரவாதியை சுற்றிவளைத்து,  சுட்டு வீழ்த்தினர். 

 இருப்பினும் ரெயில் நிலையத்துக்குள் மேலும் சில பயங்கரவாதிகள் நுழைந்து இருக்கலாம் என்ற அச்சத்தில் பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக அப்புறப்படுத்தப்பட்டனர். ரெயில் நிலையத்தையொட்டி உள்ள மிக முக்கிய சுற்றுலாதலமான ‘கிராண்ட் பிளேஸ்’ என்ற இடத்தில் இருந்த பொதுமக்களும் பாதுகாப்பு கருதி அப்புறப்படுத்தப்பட்டனர்.

இதையடுத்து, ரெயில் நிலையம் மற்றும் சுற்றுலாதலத்தில் ராணுவவீரர்கள் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அங்கு பயங்கரவாதிகள் நடமாட்டம் இல்லை என்பது உறுதி செய்யப்பட்ட பின்னர் இயல்பு நிலை திரும்பியது. இதற்கிடையே பயங்கரவாத தாக்குதலை முறியடித்த ராணுவவீரர்களின் வீரத்தை பிரதமர் சார்லஸ் மிச்செல் பாராட்டினார்.

மூலக்கதை