பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்: பிசிசிஐ மீண்டும் அழைப்பு

தினகரன்  தினகரன்

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பங்களை அனுப்பலாம் என்று கிரிக்கெட் வாரியம் மீண்டும் அழைப்பு விடுத்துள்ளது. கேப்டன் விராத் கோஹ்லியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதை தொடர்ந்து, தலைமை பயிற்சியாளர் பதவியை ராஜினாமா செய்வதாக அனில் கும்ப்ளே நேற்று முன்தினம் அறிவித்தார். வெஸ்ட் இண்டீஸ் தொடர் வரை அவர் பயிற்சியாளராக நீடிப்பார் என கிரிக்கெட் ஆலோசனைக் குழு அறிவித்திருந்த நிலையில், அவரது இந்த திடீர் அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.முன்னதாக, புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட விரும்புவோர் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி கடந்த மே 31ம் தேதியுடன் முடிவடைந்துவிட்ட நிலையில், மேலும் விண்ணப்பங்களை வரவேற்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது. இன்னும் ஒரு வாரம் அல்லது 10 நாட்களுக்கு, தகுதி வாய்ந்த நபர்கள் தங்கள் விண்ணப்பங்களை அனுப்பி வைக்கலாம் என பிசிசிஐ தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வீரேந்திர சேவக், டாம் மூடி, லால்சந்த் ராஜ்புத், ரிச்சர்ட் பைபஸ், டோடா கணேஷ் ஆகியோர் விண்ணப்பித்துள்ள நிலையில், கும்ப்ளேவின் ராஜினாமாவை தொடர்ந்து மேலும் பலர் விண்ணப்பிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மூலக்கதை