டார்ஜிலிங்கில் கடையடைப்பு போராட்டம் தொடர்கிறது

தினகரன்  தினகரன்

டார்ஜிலிங்: டார்ஜிலிங்கில் தனிமாநில கோரிக்கையை வலியுறுத்தி காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் தொடர்கிறது. மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கில் தனி மாநில கோரிக்கைைய வலியுறுத்தியும், வங்க மொழி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும், கூர்க்கா ஜன்முக்தி மோர்ச்சாவினர் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 12ம் தேதி முதல் ஆங்காங்கே கல்வீச்சு மற்றும் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றது. போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கோரிக்கையை வலியுறுத்தி காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டு வருகின்றது. மருந்து கடைகளை தவிர அனைத்து கடைகள், ஓட்டல்கள் மற்றும் ரெஸ்ட்டாரன்ட் உள்ளிட்டவை மூடப்பட்டிருக்கின்றன. போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் முக்கிய சாலைகளில் தொடர்ந்து ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கூர்க்கா ஜன்முக்தி மோர்ச்சா சார்பில் நேற்று முன்தினம் அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்பட்டது. இதில் டார்ஜிலிங்கில் இருந்து பாதுகாப்பு படையினரை திரும்பபெறும் வரை கடையடைப்பு போராட்டம் தொடரும் என்று முடிவெடுக்கப்பட்டது. மேலும் இந்த கூட்டத்தில் பங்கேற்க அரசியல் கட்சிகள் அரசின் அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்கவிரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளனர். டார்ஜிலிங்கில் அமைதியை நிலைநாட்டும் வகையில் பிரச்னைகள் குறித்து பேசுவதற்காக அரசு சார்பில் இன்று அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கூர்க்கா ஜன்முக்தி மோர்ச்சா  செய்தி தொடர்பாளர் டி அர்ஜூன் கூறுகையில், “அனைத்து கட்சி கூட்டத்தில் ஒருங்கிணைப்பு குழு ஏற்படுத்தப்படும். அந்த குழு விரைவில் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து பேசும்” என்றார்.பெண்கள் அமைப்பு போராட்டம்டார்ஜிலிங்கில் கோரிக்கையை வலியுறுத்தி பெண்கள் அமைப்பினர் பேரணி உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இந்திய கொடி மற்றும் பேனர்கள் ஏந்தியும், தனி கூர்காலாந்து வேண்டும் என்றும் கோஷமிட்டனர். இது தொடர்பாக பேசிய உறுப்பினர் மீனா குராங் கூறுகையில், “வன்முறை பிரச்னைக்கு தீர்வாகும் என்றோ அல்லது எந்த நோக்கத்திற்காகவும் நாங்கள் நினைக்கவில்லை. பிரிட்டிஷாரிடம் இருந்து அறப்போராட்டம் மற்றும் சத்தியாகிரகம் மூலமாக இந்தியா விடுதலை பெற்றது. ஆனால் நாங்கள் பெங்காலிடம் இருந்து எங்களது தனி மாநிலத்தை கோரினால் நாங்கள் வன்முறையின் வழி செல்லவேண்டி உள்ளது. தினந்தோறும் நாங்கள் பேரணியை நடத்துவோம். எங்களை போலீசார் தடை செய்தால் நாங்கள் அங்கேயே சாலையில் அமர்ந்து போராடுவோம்’’ என்றார்.மாணவர்கள் வெளியேற 12 மணி நேர அவகாசம்டார்ஜிலிங்கில் ஜூன் 15 முதல் முழு அடைப்பு போராட்டம் நடந்து வருகிறது. இதில் சிலிகுரி மற்றும் ரோங்போ பகுதியில் படிக்கும் பள்ளி மாணவர்கள் சிக்கித்தவித்து வருகிறார்கள். ஒரு வாகனம் கூட அங்கு செல்ல முடியவில்லை. கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு உள்ளதால் பாதிக்கப்பட்டு இருக்கும் அத்தனை மாணவர்களையும் பத்திரமாக அனுப்ப கூர்க்கா ஜன்முக்தி மோர்ச்சா மத்திய குழு ஆலோசனை நடத்தியது. அதன்பின் நாளை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மாணவர்களை பள்ளி பஸ்சில் மட்டும் ஏற்றி பத்திரமாக வெளியேற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பள்ளி பஸ் தவிர மற்ற வாகனங்கள் இயங்கவும், கடைகள் திறக்கவும் அனுமதி இல்லை. யாரும் டார்ஜிலிங்கில் இருந்து வெளியேற அனுமதி வழங்கப்படாது என்று பினய் தமாங் தெரிவித்தார்.

மூலக்கதை