மகனை இளவரசராக்கினார் சவுதி அரேபிய மன்னர்

தினமலர்  தினமலர்

ரியாத்: அரபு நாடுகளில் ஒன்றான சவுதி அரேபியாவின் மன்னர், சல்மான், 81, நாட்டின் ஆட்சிப் பொறுப்பை ஏற்கக் கூடிய, தன் அடுத்த வாரிசாக அறிவிக்கும் வகையில், தன் மகன் முகமது பின் சல்மானை, 31, இளவரசராக அறிவித்துள்ளார்.

எண்ணெய் வளம் அதிகம் கொண்ட அரபு நாடுகளில் ஒன்றான சவுதி அரேபியாவின் மன்னராக, சல்மான் உள்ளார். அரச குடும்பத்தைச் சேர்ந்த, தன் உறவினரான முகமது பின் நயீபை, இளவரசராகவும், தன் மகன், முகமது பின் சல்மானை, துணை இளவரசராகவும் ஏற்கனவே அறிவித்திருந்தார். இந்த நிலையில், அரசு பதவிகளில் பல்வேறு மாற்றங்களை செய்து, மன்னர், சல்மான் நேற்று அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி, இளவரசர் பதவியில் இருந்து, முகமது பின் நயீப் நீக்கப்பட்டுள்ளார். மேலும், உள்துறை அமைச்சர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்தும் நயீப் நீக்கப்பட்டுள்ளார். அதே நேரத்தில், தன் மகன், முகமது பின் சல்மானை, பட்டத்து இளவரசராக நியமிப்பதாகவும் அறிவித்துள்ளார். தற்போது, ராணுவ அமைச்சராகவும், பொருளாதார நடவடிக்கைகளுக்கான குழுவின் தலைவராகவும், அவர் உள்ளார். லண்டனில் படித்த, புதிய இளவரசர் சல்மான், துணை இளவரசராக பதவியேற்ற உடன், பல்வேறு பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டார். அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுடனான உறவையும் வலுப்படுத்தினார். இந்த ஆண்டு மார்ச் மாதம், அமெரிக்காவுக்கு சென்று, அதிபர் டொனால்டு டிரம்பை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அதைத் தொடர்ந்து, அதிபராக தன் முதல் வெளிநாட்டு பயணத்தை, சவுதி அரேபியாவுக்கு டிரம்ப் மேற்கொண்டார்.கடந்த சில மாதங்களாகவே, சல்மான் இளவரசராக நியமிக்கப்படலாம் என்று பேசப்பட்டு வந்தது.

மூலக்கதை