ஸ்காட்லாந்தில் புற்றுநோயால் பாதிக்கபட்ட 5 வயது சிறுமிக்கு திருமணம் செய்து வைத்த பெற்றோர்..!

தினகரன்  தினகரன்

எடின்பர்க்: ஸ்காட்லாந்தில் புற்று நோயால் பாதிக்கப்பட்ட ஐந்து வயது சிறுமியின் கனவை அவரது பெற்றோர்கள் நிறைவேற்றியுள்ளனர். ஸ்காட்லாந்தின் போரஸ் பகுதியைச் சேர்ந்தவர் 5 வயதான எலைட் பேட்டர்சன். இவருக்கு புற்று நோய் ஏற்பட்டுள்ளதால், தற்போது அவர் தன் வாழ்நாளை எண்ணிக் கொண்டிருக்கிறார். இதனால் அவரது பெற்றோர்கள் எலைட் பேட்டர்சனின் கனவை நிறைவேற்றியுள்ளனர். எலைட் பேட்டர்சனுக்கு திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது. இதனால் அவரது நெருங்கிய நண்பரான 6 வயது ஹாரிசன் க்ரேர்-ஐ நேற்று திருமணம் செய்து வைத்து அவரது ஆசையை பெற்றோர் நிறைவேற்றியுள்ளனர். இவர்களது திருமணம் அங்குள்ள அபர்டீன் பகுதியில் நடைபெற்றுள்ளது. இதில் இரு வீட்டார் உட்பட 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியின் போது ஒரு சிலர் உணர்ச்சியை அடக்க முடியாமல் கண்ணீரும் வடித்தனர். இந்நிகழ்வின் போது மணமகளான எலைட் பேட்டர்சன் தனது சகோதரர் கையை பிடித்து திருமணம் நடைபெறும் இடத்திற்கு மகிழ்ச்சியாக நடந்து வந்தார். அப்போது மணமகனான ஹாரிசன் க்ரேர் வந்தார். அதன் பின் இருவரும் தங்கள் கையை பிடித்துக் கொண்டு உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் முன்னிலையில் நடந்து சென்றனர். இதைத் தொடர்ந்து திருமணம் கோலாகலமகாக நடைபெற்றது. இதுகுறித்து எலைட் பேட்டர்சனின் தந்தை பில்லி கூறுகையில், இது ஒரு புதுவிதமான திருமணம் தான், ஆனால் இந்த திருமணத்தின் ஒவ்வொரு நிமிடமும் நாங்கள் மகிழ்ச்சியாக இருந்தோம் என்று கூறியுள்ளார்.

மூலக்கதை