சென்னை சில்க்ஸ் கட்டிடம் இடிப்பு மேம்பாலம் திறக்கப்பட்டதால் வாகன ஓட்டிகள் நிம்மதி

தமிழ் முரசு  தமிழ் முரசு
சென்னை சில்க்ஸ் கட்டிடம் இடிப்பு மேம்பாலம் திறக்கப்பட்டதால் வாகன ஓட்டிகள் நிம்மதி

சென்னை: தீவிபத்து ஏற்பட்ட சென்னை சில்க்ஸ் கட்டிடம் 19 நாட்களுக்கு பின் முழுமையாக நேற்று மாலை இடிக்கப்பட்டதால் வடக்கு உஸ்மான் சாலையில் போக்குவரத்து சீரானது. சென்னை தி. நகர் வடக்கு உஸ்மான் சாலையில் உள்ள சென்னை சில்க்ஸ் ஜவுளி கடையின் 7 மாடி கட்டிடத்தில் கடந்த 31ம் தேதி பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தீயில் கருகி நாசமானது. தீப்பற்றி எரிந்ததில் கட்டிடம் உருக்குலைந்து வலுவிழந்தது.

இதையடுத்து ஜா கட்டர் என்ற இயந்திரம் மூலம் கட்டிடத்தை இடிக்கும் பணி கடந்த 2ம் தேதி தொடங்கியது. அதற்காக வடக்கு உஸ்மான் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.

இதனால் அங்கு வழக்கத்தை விட வாகன நெரிசல் அதிகரித்து காணப்பட்டது. கடந்த 10ம் தேதி ஜா கட்டர் இயந்திரம் பொக்லைன் இயந்திரத்தின் மீது சரிந்து விழுந்ததில் வாலிபர் ஒருவர் பலியானார்.

கட்டிடத்தை இடிக்க மண் மேடு அமைத்து பணிகள் மேற்கொண்டதால் ஜா கட்டர் இயந்திரம் சரிந்து விழுந்தது. இதனால் 20 அடி மண்மேடு சமன் செய்து அமைத்து மீண்டும் கட்டிடம் இடிக்கும் பணி தொடங்கியது.



முன்னதாக கட்டிடத்தின் 7வது மாடியில் உள்ள கான்கிரீட் தூணை உடைத்தால் கட்டிடம் சரிந்து விழுந்து விடும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஒப்பந்த நிறுவனத்திற்கு அறிவுரை வழங்கினர். கட்டிடம் மேம்பாலத்தின் மீது விழுந்தால் சேதம் ஏற்படும் என்று கருதி மேம்பாலத்தின் அருகில் உள்ள சர்வீஸ் ரோட்டில் கட்டிடத்தை இடித்து தள்ளுவதற்கு அதிகாரிகள் முடிவு செய்தனர்.

இந்நிலையில் நேற்று மாலை 4. 10 மணியளவில் கட்டிடம் ஜா கட்டர் இயந்திரம் மூலம் சர்வீஸ் ரோட்டில் இடித்து தள்ளப்பட்டது. கட்டிடத்தின் மேல்பகுதிகள் இடிக்க பட்ட நிலையில் இரண்டு தளங்கள் வரை கட்டிட கழிவுகள் உள்ளது.

இந்த கட்டிட கழிவுகளை அகற்றும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. கட்டிட கழிவுகளை அகற்றும் பணிகள் முடிவடைய 30 நாட்களுக்கும் மேல் ஆகும்.

நேற்று மாலை 6 மணிக்கு மேல் மேம்பாலத்தில் போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டது.

அதனால் வாகனஓட்டிகள் நிம்மதி அடைந்தனர்.

.

மூலக்கதை