டாஸ்மாக் கடை அகற்றகோரி கும்மியடித்து போராட்டம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
டாஸ்மாக் கடை அகற்றகோரி கும்மியடித்து போராட்டம்

மன்னார்குடி: தமிழகத்தில் புதிதாக மதுக்கடைகள் திறக்க போராட்டம் நடந்து வருகிறது. நேற்றும் பொது மக்கள் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தினர்.

திருவாரூர்: மன்னார்குடி அடுத்த கோட்டூர் அருகே வாட்டார் கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதையடுத்து கடையை அகற்றிவிடுவதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். 1 மாத கெடு முடிந்தும் கடை அகற்றப்படாததால், ஆத்திரமடைந்த 200 பெண்கள் உள்பட 300க்கும் மேற்பட்டோர் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

கடைமுன் பெண்கள் கும்மியடித்தனர். டாஸ்மாக் துணை மேலாளர் ராஜகோபால் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள், கடையை நிரந்தரமாக மூடுவதாகவும், இப்பிரச்னை குறித்து ஒரு வாரத்திற்குள் தாசில்தார் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.

பெருங்குடி கிராமத்தில் புதிதாக டாஸ்மாக் கடை அமைப்பதற்கு தனியார் இடத்தில் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதைக்கண்டித்து அங்குள்ள விஏஓ அலுவலகம் முன் அப்பகுதி கிராம மக்கள் நேற்று முன்தினம் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதிகாரிகள் யாரும் கண்டுகொள்ளாததால் காத்திருப்பு போராட்டமாக மாற்றி அங்கேயே இருந்தனர். 2வது நாளான நேற்று மாலை அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

புதிதாக கடை அமைக்க மாட்டோம் என உறுதி அளித்தனர். இதனால் போராட்டத்தை கைவிட்டனர்.



திருச்சி: மருங்காபுரி தாலுகா ஊனையூரில் டாஸ்மாக் கடைக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். 4 நாட்களுக்கு முன் நடுவிப்பட்டியை சேர்ந்த சின்னையா என்பவர் கடை முன்பு ரத்த காயத்துடன் இறந்து கிடந்ததால் பொதுமக்கள், உறவினர்கள் டாஸ்மாக் கடையை சூறையாடினர்.

மக்களின் கடும் எதிர்ப்பு காரணமாக கடை 5 நாட்களாக மூடப்பட்டுள்ளது. கடையை திறப்பது சம்பந்தமாக நேற்று மருங்காபுரி தாசில்தார் அலுவலகத்தில் தாசில்தார் கண்ணன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

கூட்டத்தில், மீண்டும் டாஸ்மாக் கடையை திறக்க கடும் எதிர்ப்பு தெரிவித்த கிராம மக்கள் குடித்துவிட்டு ரோட்டில் செல்லும் பெண்களை கேலி செய்வது, குடிக்க பணம் இல்லாததால் அருகில் உள்ள வீடுகளில் ஆடு, கோழிகளை திருடும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது என்றனர். கடையை இடமாற்றம் செய்ய டாஸ்மாக் அதிகாரிகள் தரப்பில் 60 நாட்கள் அவகாசம் கேட்டனர்.

இதை கிராம மக்கள் நிராகரித்தனர். மேலும், ஊனையூர், மற்றும் கண்ணுக்குழி ஊராட்சி பகுதிகளில் கடை திறக்கக்கூடாது என்றும், மற்ற இடங்களுக்கு கடையை மாற்றலாம் என்றும் தெரிவித்தனர்.

கலெக்டருக்கு அறிக்கை அனுப்பி, அதன் பேரில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தாசில்தார் கண்ணன் கூறியதை கிராம மக்கள் ஏற்றுக்கொண்டனர்.

.

மூலக்கதை