லயோலா சுரங்கப்பாதையில் போக்குவரத்து மாற்றம் நெரிசலில் திணறும் மத்திய சென்னை: அதிகாரிகள் குழப்பத்தால் மாணவர்கள் அவதி

தமிழ் முரசு  தமிழ் முரசு
லயோலா சுரங்கப்பாதையில் போக்குவரத்து மாற்றம் நெரிசலில் திணறும் மத்திய சென்னை: அதிகாரிகள் குழப்பத்தால் மாணவர்கள் அவதி

சென்னை: சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள லயோலா சுரங்கப்பாதையில் நேற்று முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டதால், மத்திய சென்னை முழுவதும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. திட்டமிடுதல் இல்லாமல் பள்ளிகள் திறந்துள்ள நேரத்தில் பணிகளை மேற்கொள்வதால்  மாணவ, மாணவிகள், பொதுமக்கள் கடும் அவதிப்படுகின்றனர்.

சென்னை நகரின் முக்கிய சாலைகளாக இருப்பது அண்ணாசாலை, பூந்தமல்லி ஈவேரா நெடுஞ்சாலை, காமராஜர் சாலைகள். இந்த 3 முக்கிய சாலைகளில் இருந்துதான் கிளை சாலைகள் செல்கின்றது.

இந்த சாலைகளில் ஏதாவது ஒரு சாலையில் பிரச்னை ஏற்பட்டால் நகரின் முக்கிய பகுதிகள் முழுவதும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விடும். தற்போது பூந்தமல்லி ஈவெரா. நெடுஞ்சாலையில் கோயம்பேட்டில் இருந்து வரும் வாகனங்கள் நெல்சன் மாணிக்கம் சாலை வழியாக செல்வது வழக்கம்.

தற்போது, லயோலா கல்லூரி அருகில் உள்ள சுரங்கப்பாதையில் பராமரிப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதனால் நெல்சன் மாணிக்கம் சாலையில் இருந்து நுங்கம்பாக்கம் செல்லும் வழிகள் மூடப்பட்டு விட்டன.

இதனால் போக்குவரத்து திருப்பிவிடப்பட்டுள்ளது. வருகிற 2 மாதத்திற்கு இந்த மாற்றங்கள் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல், மே மாதம் முழுவதும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது.

பலரும் விடுமுறைக்காக வெளியூர்களுக்கு சென்றுவிட்டனர். இதனால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

அப்போது பராமரிப்பு பணிகளை செய்திருந்தால் மக்களுக்கு எந்த பிரச்னையும் ஏற்பட்டிருக்காது. ஆனால் தற்போது பணிகள் மேற்கொள்வதால் மக்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகின்றனர்.

தற்போது, ஈ. வெ. ரா. சாலை சந்திப்பில் இருந்து நெல்சன் மாணிக்கம் சாலை வழியாக சுரங்கப்பாதை (லயோலா சுரங்கப்பாதை) நோக்கி செல்லும் வாகனங்கள் ஈ. வெ. ரா.

சாலை நெல்சன் மாணிக்கம் சாலை சந்திப்பில் திருப்பப்பட்டு - அமைந்தகரை வழியாக திருப்பி விடப்பட்டுள்ளது. இதனால் பலரும் பச்சையப்பன் கல்லூரி அருகில் வலது புறம் திரும்பி, ஹாரிங்டன் சாலை வழியாக செல்கின்றனர்.

அதேநேரத்தில் நெல்சன் மாணிக்கம் சாலையில் வரும் வாகனங்களும் அதே சாலையில் செல்கின்றன. பச்சையப்பன் கல்லூரி பின்புறம் உள்ள சுரங்கப்பாதை மிகச் சிறியது.

இரு சாலைகளில் இருந்து வாகனங்கள் அங்கு திருப்பி விடப்படுவதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் சேத்துப்பட்டு சிக்னலில் இருந்து ஹாரிங்டன் சாலை, நெல்சன் மாணிக்கம் சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் பல மணி நேரம் ஊர்ந்தபடிதான் செல்கின்றன.

இதனால் காலையில் பள்ளிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள், வேலைகளுக்குச் செல்பவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். திட்டமிடுதல் இல்லாமல் திடீரென முக்கிய சாலைகளில் போக்குவரத்தை தடை செய்வது கடுமையான குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

நேற்று மாலை முதல் இந்த போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டன. ஆனால் இன்று காலையில்தான் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இனி 2 மாதத்திற்கு இந்த போக்குவரத்து மாற்றம் இருக்கும் என்று அறிவித்துள்ளது, மக்களை கடுமையான சோதனைக்கு உள்ளாக்கும் என்கின்றனர் வாகன ஓட்டிகள்.

.

மூலக்கதை