ஜனாதிபதி தேர்தலில் பாஜகவை ஆதரிக்க சசிகலா நிபந்தனை: தலைவர்களை சந்திக்க தம்பித்துரை டெல்லி சென்றார்

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஜனாதிபதி தேர்தலில் பாஜகவை ஆதரிக்க சசிகலா நிபந்தனை: தலைவர்களை சந்திக்க தம்பித்துரை டெல்லி சென்றார்

பெங்களுரு: ஜனாதிபதி தேர்தலில் பாஜகவை ஆதரிக்க சசிகலா முடிவெடுத்துள்ளார். ஆனால் அதற்கு அவர் நிபந்தனைகள் விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது குறித்து டெல்லி மேலிடத்தில் பேச தம்பி துரை நேற்று டெல்லி விரைந்துள்ளார். ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாஜ வேட்பாளரும் அறிவிக்கப்பட்டுள்ளார். எதிர்க்கட்சிகள் சார்பில் நாளை வேட்பாளர் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலைியல், பாஜ வேட்பாளருக்கு தெலங்கானாவில் உள்ள டிஆர்எஸ், ஆந்திராவில் உள்ள ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், ஒரிசா பிஜூ ஜனதா தளம், அதிமுகவில் எடப்பாடி அணி, ஓபிஎஸ் அணிகள் ஆதரிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சசிகலா அணி என்ன முடிவு எடுக்கும் என்ற தகவல்கள் தெரியாமல் இருந்தது.

இந்தநிலையில், பெங்களுரு பரப்பன அக்ரஹார சிறையிலிருக்கும் சசிகலாவை நேற்று மதியம் 1. 50 க்கு தம்பித்துரை சென்று பார்த்தார். சசிகலா சிறையில் அடைக்கப்பட்ட பிறகு முதல் முறையாக தம்பித்துரை சென்று பார்த்துள்ளார்.

சசிகலாவும் தம்பிதுரையும் நீண்ட நேரம் பாஜ வேட்பாளர், தற்போதைய கட்சியின் நிலை குறித்து தீவிரமாக ஆலோசனை செய்தனர். அதன் பிறகு சசிகலா அழைத்ததின் பெயரில் டிடிவி தினகரன், வெங்கடேஷ் ஆகிய இருவரும் சிறைக்கு மதியம் 2. 50 மணிக்கு சென்றனர்.

உள்ளே தம்பி துரை, தினகரன் ,வெங்கடேஷ்  சசிகலா ஆகிய 4  பேரும் நீண்ட நேரங்களாக ஆலோசனை செய்தார்கள். இந்த ஆலோசனைக்குப் பிறகு 3. 55 க்கு தம்பிதுரை மட்டும் தனியாக வெளியே வந்தார்.

அதன் பிறகு நீண்ட நேரம் தினகரன், வெங்கடேஷ் ஆகியோருடன் சசிகலா ஆலோசனை நடத்தியிருக்கிறார். இந்த ஆலோசனையின் முடிவில் பல்வேறு முடிவுகள் எடுக்கப் பட்டதாக தெரிகிறது.



உள்ளே என்ன நடந்து என்று தினகரன் தரப்பில் பேசினோம் “ ஜனாதிபதி தேர்தல் குறித்து முக்கிய முடிவுகள் எடுப்பது குறித்து ஆலோசனை நடந்து. இதில் பாஜகவை ஆதரிக்க அதிமுக தரப்பில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அதிமுக 132 எம். எல். ஏகள், 49 எம். பிகள் கொண்ட 3வது பெரிய கட்சியாக இருக்கிறது. இந்த நிலையில் பாஜகவிற்கு ஆதரவை தெரிவிக்க முன்வந்துள்ள நிலையில் சசிகலாவின் தரப்பில் பாஜகவிடம் இரண்டு கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழக ஆட்சியினை தொடர்ந்து நடத்ததுவதில்  பாஜக  தொந்தரவு செய்யக்கூடாது. அடுத்தபடியாக சசிகலாவை சிறையிலிருந்து  வெளியே கொண்டு வர உதவி செய்வது குறித்த முக்கிய இரண்டு கோரிக்கைகளை சசிகலா தரப்பிலிருந்து வைக்கப்படுள்ளன.

இதனை சசிகலா தரப்பில் தெரிவித்ததும் ஆட்சியில் சசிகலாவோ, தினகரனோ யாரும் தலையீடு செய்ய மாட்டார்கள். கட்சியை மட்டும் தினகரன் வழிநடத்தி கொண்டு செல்வார்.

ஜனாதிபதி தேர்தல் வரும் ஜூலை 17 ல் நடக்கவிருக்கிறது. அதற்கு முன்பு ஜூலை முதல் வாரத்தில்  உச்ச நீதிமன்றம் கோடை விடுமுறையை முடிந்து திறக்க இருக்கிறது.

சசிகலா தரப்பில் கடந்த மார்ச் மாதம் போடப்பட்ட சொத்துக் குவிப்பு வழக்கின் மறு சீராய்வு மனு இன்னும் விசாரிக்காமல் அப்படியே கிடைப்பில் கிடக்கிறது. இதை மீண்டும் விசாரிக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இந்த விசாரனையின் முடிவைப் பொறுத்துதான் சசிகலா வீட்டு திருமணம் செப்டம்பர், ஆகஸ்ட் இறுதியில் நடத்த திட்டமிட்டுள்ளனர். சீராய்வு மனுவை விசாரிக்கும்போது, உச்சநீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்தநிபந்தனைகளுடன், தம்பிதுரை டெல்லி சென்றுள்ளார். இன்று அவர் மத்திய அமைச்சர் வெங்கையாநாயுடுவை சந்திக்கிறார்.

சசிகலாவின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்குமா? அல்லது எடப்பாடி, ஓபிஎஸ் அணியின் ஆதரவை மட்டும் பெற்றுக் கொண்டு சசிகலாவை கண்டு கொள்ளாமல் விட்டு விடுவார்களா? என்பது ஓரிரு நாளில் தெரியவரும் என்கின்றனர் அதிமுகினர்.

.

மூலக்கதை