பிலிப்பைன்சில் அட்டூழியம் பள்ளிக்குள் புகுந்து மாணவர்களை சிறைபிடித்த ஐஎஸ் தீவிரவாதிகள்: மீட்கும் பணியில் ராணுவம் மும்முரம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
பிலிப்பைன்சில் அட்டூழியம் பள்ளிக்குள் புகுந்து மாணவர்களை சிறைபிடித்த ஐஎஸ் தீவிரவாதிகள்: மீட்கும் பணியில் ராணுவம் மும்முரம்

மணிலா: பிலிப்பைன்ஸ் நாட்டில் பள்ளிக்குள் புகுந்த ஐஎஸ் தீவிரவாதிகள், அங்கிருந்த மாணவர்களை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர். அவர்களை மீட்கும் பணியில் அந்நாட்டு ராணுவம் ஈடுபட்டுள்ளது.

தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்சில் ஐஎஸ் தீவிரவாதிகள் ஆதரவு பெற்ற குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. நாசவேலையில் ஈடுபட்டுவரும் இவர்களை ஒடுக்க அந்நாட்டு அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

தீவிரவாதிகள் பதுங்கியிருக்கும் இடங்களை குறிவைத்து ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், தெற்கு பிலிப்பைன்சில் உள்ள பிக்கவ்யான் பகுதியில் இயங்கிவரும் பள்ளி ஒன்றில் இன்று காலை ஐஎஸ் தீவிரவாதிகள் அதிரடியாக நுழைந்தனர்.

அங்கு வகுப்பறைகளில் இருந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் மற்றும் சிலரை தீவிரவாதிகள் சிறைபிடித்தனர். தகவலறிந்து ராணுவ வீரர்கள் அங்கு விரைந்து வந்தனர்.

தீவிரவாதிகளிடம் சிக்கியிருக்கும் மாணவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மாணவர்களை பிணையக்கைதிகளாக பிடித்து வைத்திருப்பதால், ராணுவம் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனினும் மாணவர்களை மீட்க ராணுவத்தினர் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே, பள்ளிக்குள் புகுந்திருக்கும் தீவிரவாதிகள், வீரர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்துகின்றனர்.

வீரர்களும் அவர்களுக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.

பள்ளிக்குள் புகுந்து மாணவ, மாணவிகளை தீவிரவாதிகள் பிடித்து வைத்திருப்பதால் பெற்றோர்கள், பொதுமக்கள் மிகுந்த அச்சம் அடைந்துள்ளனர்.

.

மூலக்கதை