மேல்மருவத்தூரில் அரசு பஸ் எரிந்தது: பயணிகள் உயிர் தப்பினர்

தமிழ் முரசு  தமிழ் முரசு
மேல்மருவத்தூரில் அரசு பஸ் எரிந்தது: பயணிகள் உயிர் தப்பினர்

மதுராந்தகம்: மேல்மருவத்தூரில் அரசு பஸ் தீப்பிடித்து எரிந்தது. இதில் 50 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

விழுப்புரத்தில் இருந்து சென்னைக்கு இன்று காலை ஒரு அரசு பஸ் 50 பயணிகளுடன் வந்தது. விழுப்புரத்தை சேர்ந்த நீலகண்டன் (45) பஸ்சை ஓட்டி வந்தார்.

கண்டக்டராக விழுப்புரத்தை சேர்ந்த கலியபெருமாள் (44) பணியாற்றினார். மேல்மருவத்தூர் பேருந்து நிலையத்தில் பஸ் நின்றபோது பேட்டரி அமைந்துள்ள பகுதியில் இருந்து திடீரென புகை எழும்பியது.

இதைப் பார்த்ததும் பயணிகள் அனைவரும் அலறியடித்துக்கொண்டு கீழே இறங்கினர். இதனிடையே பேட்டரியில் மளமளவென தீப்பிடித்து கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்தது.

இதனால் பஸ் நிலையத்தில் இருந்த பொதுமக்களும் ஓட்டம் பிடித்தனர். இதனால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் அச்சிறுப்பாக்கம் தீயணைப்பு நிலையத்தில் இருந்து வீரர்கள் விரைந்துவந்தனர்.

அவர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இதில் பஸ்சின் பெரும்பாலான பகுதி எரிந்து நாசமானது.

இதனால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. இதன் காரணமாக அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுபற்றி அறிந்ததும் மேல்மருவத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்தனர். போக்குவரத்து நெரிசலில் சிக்கியிருந்த வாகனங்களை ஒழுங்குபடுத்தி போக்குவரத்தை சீர்செய்தனர்.

‘’முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தினாலேயே பஸ் தீப்பிடித்து எரிந்தது’ என்று பயணிகள் கூறினர்.

.

மூலக்கதை