புதிய பயிற்சியாளர் தேர்வு குறித்து கேப்டன் மற்றும் வீரர்களிடம் கலந்தாலோசனை இல்லை : இந்திய கிரிக்கெட் வாரியம்

தினகரன்  தினகரன்

மும்பை: இந்திய கிரிக்கெட் அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளர் தேர்வு செய்யப்படும் போது, கேப்டன் மற்றும் அணி வீரர்களிடம் கலந்தாலோசிக்கப் போவதில்லை என கிரிக்கெட் ஆலோசனைக் குழு தெரிவித்துள்ளது. கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியிலிருந்து அனில் கும்ப்ளே நேற்று விலகி கொள்வதாக அறிவித்தார். இதற்கு கேப்டன் விராட் கோலியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளே காரணம் என கூறப்படுகிறது. இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய கிரிக்கெட் வாரியத்தின் இடைக்காலத் தலைவர் சி.கே.கன்னா, புதிய பயிற்சியாளர் பெயரை ஆலோசனைக் குழு விரைவில் அறிவிக்கும் என்றார். புதிய பயிற்சியாளர் தேர்வின் போது கேப்டன் மற்றும் அணி வீரர்களிடம் கலந்தாலோசிக்கப் போவதில்லை என தேர்வு குழுவினர் தெரிவித்துள்ளதாகவும், கன்னா கூறினார். தேர்வு குழுவினர் எந்த முடிவை எடுக்கின்றனரோ அதனை இந்திய கிரிக்கெட் வாரியம் செயல்படுத்தும் என்றார். இதனிடையே கிரிக்கெட் தொடரில் விளையாட வெஸ்ட் இண்டிஸ் சென்றுள்ள இந்திய அணிக்கு, சஞ்சய் பாங்கர் பேட்டிங் பயிற்சியாளராகவும், ஃபீல்டிங் பயிற்சியாளராக ஆர்.ஸ்ரீதரும் இந்திய அணியை வழிநடத்த உள்ளனர்.

மூலக்கதை