வீரர்கள் கொல்லப்படுவது மனித உரிமை மீறல் ஆகாது': சி.ஆர்.பி.எப்.,

தினமலர்  தினமலர்
வீரர்கள் கொல்லப்படுவது மனித உரிமை மீறல் ஆகாது: சி.ஆர்.பி.எப்.,

புதுடில்லி: 'நக்சல்களுக்கு எதிரான வேட்டையின் போது, சி.ஆர்.பி.எப்., வீரர்கள் மரணம் அடைவதை, மனித உரிமை மீறலாக கருத முடியாது' என, சி.ஆர்.பி.எப்., சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பீஹார், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில், நக்சல்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். வனப்பகுதிகளில் பதுங்கியிருக்கும் அந்த அமைப்பினர், அரசு அலுவலகங்கள், அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்துவதோடு, பொதுச் சொத்துக்களுக்கும் சேதம் விளைவிக்கின்றனர். நக்சல்களை ஒடுக்குவதற்காக, சி.ஆர்.பி.எப்., எனப்படும், மத்திய ரிசர்வ் போலீஸ் படையை சேர்ந்த துணை ராணுவப்படையினர், சிறப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வனப் பகுதிக்குள் பதுங்கியிருக்கும் நக்சல்களை ஒடுக்க, சி.ஆர்.பி.எப்., வீரர்கள் அதிரடி வேட்டையில் ஈடுபடும் போது, நக்சல்தாக்குதலில், பல வீரர்கள் பலியாகியுள்ளனர்.

இந்நிலையில், நக்சல்களுக்கு எதிரான வேட்டையில் ஈடுபடும், சி.ஆர்.பி.எப்., வீரர்கள் கொல்லப்படுவது, மனித உரிமை மீறல் எனக் கூறி, அது குறித்து விளக்கம் அளிக்கும்படி, சமூக ஆர்வலர் வெங்கடேஷ் நாயக் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

அவரது மனுவுக்கு, சி.ஆர்.பி.எப்., சார்பில் அளிக்கப்பட்ட பதிலில் கூறப்பட்டுள்ளதாவது: நக்சல் வேட்டையில் ஈடுபடும், சி.ஆர்.பி.எப்., வீரர்கள் கொல்லப்படுவதை, மனித உரிமை மீறலாக கருத முடியாது. இந்தப் பணியில், எவ்வித பாரபட்சமோ, ஊழலோ நடப்பது கிடையாது. இது குறித்து, ஆர்.டி.ஐ., எனப்படும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், விளக்கம் அளிக்க வேண்டிய அவசியம் கிடையாது; இது, அந்த வரையறையின் கீழ் வராது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை