உலக அளவில் போர்க்கப்பல் தயாரிப்பில் இந்தியா முன்னேறி வருகிறது

PARIS TAMIL  PARIS TAMIL
உலக அளவில் போர்க்கப்பல் தயாரிப்பில் இந்தியா முன்னேறி வருகிறது

இந்திய கடற்படைக்கு தேவையான மிதக்கும் கப்பல் பழுது நீக்கும் தளம் சென்னையை அடுத்த காட்டுப்பள்ளியில் உள்ள எல் அண்டு டி துறைமுகத்தில் உருவாக்கப்பட்டு உள்ளது. இதனை முறைப்படி இந்திய கடற்படையிடம் ஒப்படைக்கும் விழா நேற்று நடந்தது.

விழாவிற்கு இந்திய கடற்படை துணை அட்மிரல் டி.எம்.தேஷ்பாண்டே தலைமை தாங்கினார். அவரது மனைவி அஞ்சலி கப்பல் பழுதுநீக்கும் தளத்தை முறைப்படி தொடங்கிவைத்தார்.  பின்னர் துணை அட்மிரல் தேஷ்பாண்டே நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

மிதக்கும் கப்பல் பழுதுநீக்கும் தளம் இந்திய தொழில்நுட்பத்தில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு உள்ளது. அந்தமானில் அதிக அளவில் கப்பல் வர்த்தகம் நடப்பதால், இந்த பழுது நீக்கும் தளம் அங்கு கொண்டு செல்லப்படுகிறது. போர் கப்பல் வாங்குவது தொடர்பாக 2021 வரைவு திட்டம் ஒன்றை வைத்துள்ளோம். அதை நோக்கி தான் தற்போது பயணித்து வருகிறோம். 2027–ம் ஆண்டு வரை அந்த திட்டம் தொடரும்.

இந்த கால கட்டத்தில், நாட்டின் பாதுகாப்பை அதிகரிக்க தேவையான போர்க்கப்பல்கள் தயாரிப்பது மற்றும் பழுது நீக்கும் தளங்கள் வாங்குவது உள்ளிட்டவற்றுக்காக அதிக நிதி ஒதுக்கப்படும்.  தனியார் கப்பல் கட்டும் நிறுவனங்களுக்காக, கடந்த 2 ஆண்டில் மத்திய பாதுகாப்புத்துறை ரூ.1 லட்சத்து 45 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கியது. கடந்த ஆண்டில் கப்பல் தயாரிக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டது. ஆனால் தற்போது அதில் இருந்து மீண்டுவிட்டோம்.

கப்பல் படைக்கு தேவையான போர் கப்பல்கள் நாட்டின் பல்வேறு இடங்களில் தயாரிக்கப்படுகிறது. உலக அளவில் போர் கப்பல் தயாரிப்பில் பெரிய போட்டி நிலவுகிறது. அதில் இந்தியா முதலிடம் பிடிக்கவில்லை. இருப்பினும் முன்னேறி வருகிறது. ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தால் வெளிநாடுகளில் கப்பல் வாங்குவது குறைந்துள்ளது. இந்தியா தற்போது உற்பத்தி பூங்காவாக மாறி உள்ளது.  இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக துணை அட்மிரல் (ஓய்வு) பி.கண்ணன் வரவேற்றார். விழாவில் அட்மிரல் அலோக் பட்நாகர், கடற்படை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

மூலக்கதை