லண்டனில் இருந்து புறப்பட்டனர் இந்திய அணி வீரர்கள் வெஸ்ட் இண்டீஸ் பயணம்

தினகரன்  தினகரன்

லண்டன்: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியிடம் தோற்று கோப்பையை பறிகொடுத்த இந்திய அணி வீரர்கள், ஒருநாள் மற்றும் டி20 போட்டியில் விளையாடுவதற்காக லண்டனில் இருந்து வெஸ்ட் இண்டீஸ் சென்றனர். இங்கிலாந்தில் நடைபெற்ற மினி உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடரில், கோஹ்லி தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொள்ளும் முனைப்புடன் பங்கேற்றது. டாப் 8 அணிகள் இரு பிரிவிவுகளாக களமிறங்கிய நிலையில், லீக் சுற்றின் முடிவில் ஏ பிரிவில் இருந்து இங்கிலாந்து, வங்கதேசம், பி பிரிவில் இருந்து இந்தியா, பாகிஸ்தான் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்றன.அரை இறுதியில் பாகிஸ்தான் அணி இங்கிலாந்தையும், இந்திய அணி வங்கதேசத்தையும் வீழ்த்தி பைனலுக்கு முன்னேறின. பரபரப்பான இறுதிப் போட்டியில், இந்திய அணி மோசமாக விளையாடி 180 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. கடும் விமரசனத்துக்கு ஆளான நிலையில், கோஹ்லி தலைமையிலான இந்திய அணி அடுத்து ஒருநாள் மற்றும் டி20 போட்டியில் விளையாடுவதற்காக இங்கிலாந்தில் இருந்து நேராக வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ளது. இந்த சுற்றுப்பயணத்தில் இந்தியா 5 ஒருநாள், 1 டி20 போட்டியில் விளையாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதல் ஒருநாள் போட்டி ஜூன் 23ம் தேதி டிரினிடாட், குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது.இந்தியா: விராத் கோஹ்லி (கேப்டன்), ஷிகர் தவான், ரிஷப் பன்ட், அஜிங்க்யா ரகானே, எம்.எஸ்.டோனி, யுவராஜ் சிங், மணிஷ் பாண்டே, ரவீந்திர ஜடேஜா, ஆர்.அஷ்வின், கேதார் ஜாதவ், தினேஷ் கார்த்திக், புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, ஹர்திக் பாண்டியா, உமேஷ் யாதவ், குல்தீப் யாதவ்.வெஸ்ட் இண்டீஸ் (முதல் 2 போட்டி): ஜேசன் ஹோல்டர் (கேப்டன்), தேவேந்திர பிஷூ, ஜொனாதன் கார்ட்டர், ரோஸ்டன் சேஸ், மிகுவல் கம்மின்ஸ், ஷாய் ஹோப் (விக்கெட் கீப்பர்), அல்ஸாரி ஜோசப், எவின் லூயிஸ், ஜேசன் முகமது, ஆஷ்லி நர்ஸ், கியரன் பாவெல், ரோவ்மன் பாவெல், கெஸ்ரிக் வில்லியம்ஸ்.

மூலக்கதை