பயிற்சியாளர் கும்ப்ளே திடீர் ராஜினாமா

தினகரன்  தினகரன்

லண்டன்: இந்திய கிரிக்கெட் அணி தலைமை பயிற்சியாளர் அனில் கும்ப்ளே பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ் தொடரில் பங்கேற்பதற்காக கோஹ்லி தலைமையிலான இந்திய அணி நேற்று பயணமான நிலையில், தலைமை பயிற்சியாளர் அனில் கும்ப்ளே மட்டும் லண்டனிலேயே தங்கியுள்ளார். ஐசிசி கிரிக்கெட் கமிட்டி கூட்டத்தில் கலந்து கொள்வதற்காகவே அவர் இந்திய அணியுடன் பயணமாகவில்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த குழுவின் தலைவராகவும் கும்ப்ளே செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. கேப்டன் கோஹ்லி - பயிற்சியாளர் கும்ப்ளே இடையே மோதல் வெடித்துள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியான நிலையில், ஐசிசி கூட்டம் 23ம் தேதி முடிந்த பிறகு கும்ப்ளே வெஸ்ட் இண்டீஸ் புறப்பட்டு செல்வாரா என்பது குறித்து பிசிசிஐ தரப்பில் உறுதி செய்யப்படவில்லை. இந்த நிலையில், பயிற்சியாளர் பதவியை ராஜினாமா செய்வதாக கும்ப்ளே அறிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கும்ப்ளேவுடன் இணைந்து செயல்பட விரும்பவில்லை என்று சச்சின், கங்குலி, லஷ்மண் ஆகியோர் அடங்கிய கிரிக்கெட் ஆலோசனைக் குழுவினரிடம் கோஹ்லி உறுதியாக தெரிவித்துவிட்டதாகவும், மினி உலக கோப்பை தொடரின்போது இருவரும் பேசிக் கொள்வதை கூட தவிர்த்து வந்ததாகவும் தெரிய வந்துள்ளது. கடந்த ஓராண்டாக கும்ப்ளேவின் பயிற்சியின் கீழ் இந்திய அணி மிக வெற்றிகரமாக செயல்பட்டு வந்த நிலையில், பிசிசிஐ பதவிக்காலத்தை நீட்டிக்காமல் புதிய பயிற்சியாளர் நியமனத்துக்கு விண்ணப்பங்களை கோரியதும் கும்ப்ளேவை விரக்தி அடையச் செய்துவிட்டது.கும்ப்ளே பயிற்சியாளராக பொறுப்பேற்ற பிறகு இந்திய அணி விளையாடிய 17 டெஸ்டில் 12 வெற்றி, 4 டிரா, 1 தோல்வி கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கோஹ்லியின் எதிர்ப்பு காரணமாகவே அவரது ஒப்பந்தம் நீட்டிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

மூலக்கதை