டிடிவி.தினகரன் ஆதரவு அணி போர்க்கொடி தூக்கிய நிலையில் எடப்பாடி, ஓபிஎஸ் அணிகள் நாளை இப்தார் விருந்து

தமிழ் முரசு  தமிழ் முரசு
டிடிவி.தினகரன் ஆதரவு அணி போர்க்கொடி தூக்கிய நிலையில் எடப்பாடி, ஓபிஎஸ் அணிகள் நாளை இப்தார் விருந்து

சென்னை: டிடிவி. தினகரன் ஆதரவு அணியினர் போர்க்கொடி தூக்கிய நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ஓபிஎஸ் அணியினர் நாளை தனித்தனியாக இப்தார் விருந்து நிகழ்ச்சியை நடத்துகின்றனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக இரண்டாக உடைந்த பிறகு தமிழக அரசியலில் ஒவ்வொரு நாளும் ஒரு பரபரப்பு நிலவி வருகிறது. இந்நிலையில் அதிமுக தற்போது எடப்பாடி அணி, ஓபிஎஸ் அணி, டிடிவி. தினகரன் அணி, திவாகரன் அணி என 4 அணிகளாக பிரிந்துள்ளது.

அதில், தினகரன் அணியினர் அடிக்கடி கூட்டம் போட்டு பேசுவது, கட்சிக்குள்ளும், ஆட்சிக்குள்ளும் குழப்பத்தை ஏற்படுத்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த வாரம் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்த தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள், ‘’ ஆட்சிக்கு எடப்பாடி, கட்சிக்கு தினகரன் என்று செயல்பட வேண்டும். மதுரையில் நடைபெறும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை தினகரன் தலைமையில் நடத்த வேண்டும்.

முதல்வராக இருந்த ஜெயலலிதா, சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இப்தார் விருந்து நிகழ்ச்சியை நடத்துவார். இதன்படி இந்தாண்டு தினகரன் தலைமையில் நடத்த வேண்டும்.

தினகரன் தினமும் கட்சி அலுவலகம் வந்து பணிகளை கவனிக்க அனுமதிக்க வேண்டும்’’ என்று கேட்டுக் கொண்டனர். இதுகுறித்து மூத்த தலைவர்களிடம் கலந்துபேசி முடிவு எடுக்கப்படும் என்று எடப்பாடி பழனிச்சாமி குறிப்பிட்டார்.

இதன்படி மூத்த தலைவர்களுடன் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தினார்.

ஆனால் இதில் என்ன முடிவு எடுக்கப்பட்டது என்பது தெரிவிக்கப்படவில்லை. ஆனால், தினகரன், கட்சி அலுவலகத்துக்கு வரவில்லை.

அதேநேரத்தில், அதிமுக சார்பில் இப்தார் விருந்து நிகழ்ச்சிக்கான அழைப்பிதழ் தயாரிக்கப்பட்டது. அதில், எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெறும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தினகரன் பெயர் அதில் குறிப்பிடவில்லை. இதனால் நாளை நடைபெறும் இப்தார் விருந்து நிகழ்ச்சிக்கு தினகரன் அணியினர் வருவார்களா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
இதனிடையே ஓபிஎஸ் அணி சார்பில் நாளை மாலை ெசன்னை எழும்பூரில் உள்ள அசோகா ஓட்டலில் இப்தார் விருந்து நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

அதிமுகவின் இரு அணிகள் சார்பில் தனித்தனியாக இப்தார் விருந்து நிகழ்ச்சி நடத்தப்படுவதால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

.

மூலக்கதை