வளிமண்டல மேலடுக்கில் சுழற்சி சென்னையில் பலத்த மழை

தமிழ் முரசு  தமிழ் முரசு
வளிமண்டல மேலடுக்கில் சுழற்சி சென்னையில் பலத்த மழை

சென்னை: ஆந்திரா, கர்நாடகா மாநில கடலோரப்பகுதிகளில், வளிமண்டல மேலடுக்கில் ஏற்பட்ட சுழற்சி காரணமாக, சென்னை மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று இரவு மழை பெய்தது. இன்று காலையும் பல இடங்களில் மழை விட்டு விட்டு நீடித்ததால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் வெயில் அனலாய் சுட்டெரித்தது. இதனை தொடர்ந்து கடந்த மே மாதம் 4ம் தேதி முதல் கத்திரி வெயில் (அக்னி நட்சத்திரம்) தொடங்கியதால் பொதுமக்கள் வெளியே செல்லவே அச்சப்பட்டனர்.

கால்நடைகளும் நீர் நிலைகளை தேடி அலையும் சூழ்நிலை உருவானது. அதுமட்டுமின்றி வெயில் காரணமாக சுருண்டு விழுந்து ஒரு சிலர் இறந்தனர்.

இதனால், வெயில் முடிந்து மழை எப்போது வரும் என்று பொதுமக்கள் பெரிய எதிர்பார்ப்பில் இருந்தனர்.
 
தமிழகத்தில் வெயில் உக்கிரம் குறையாத நிலையில், இந்த மாதம் முதல் வாரத்திலேயே அண்டை மாநிலமான கேரளாவில் தென் மேற்கு பருவமழை தொடங்கியது.

இதன் காரணமாக தமிழகத்திலும் மழை பெய்யாதா என பொதுமக்களின் எதிர்பார்ப்பு அதிகரித்தது. இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநில கடலோரங்களில் வளிமண்டல மேலடுக்கில் சுழற்சி ஏற்பட்டதால், நேற்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் கன மழை பெய்தது.

சென்னையில் மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, வடபழனி, மேடவாக்கம், பள்ளிக்கரணை, தாம்பரம் மற்றும் காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்ளில் நேற்று இரவு முழுவதும் மழை விட்டு விட்டு பெய்தது. சென்னையில் கிண்டி உள்ளிட்ட இடங்களில் சாலைகளில் மழை நீர் ஆறு போல பெருக்கெடுத்து ஓடியது.   இன்று காலையில் இருந்தும் பல இடங்களில் மழை பெய்து வருகிறது.


 
கடந்த 6 மாதங்களுக்கு மேலாக வெயிலின் உக்கிரத்தால் தவித்து வந்த பொதுமக்களுக்கு, தற்போது பெய்து வரும் மழை மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்றைய நிலவரப்படி சென்னையில் 2. 7 மி. மீட்டர், காஞ்சிபுரம், திருவள்ளூரில் 1. 1 மி. மீ. , மழை பெய்துள்ளது.

மாநிலத்தில் அதிகபட்சமாக கன்னியாகுமரியில் 5. 7 மி. மீட்டர் அளவு மழை பெய்துள்ளது. ஆந்திரா, கர்நாடகா கடலோர பகுதிகளில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளதால், தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


.

மூலக்கதை