எங்கள் கோரிக்கைைய எடப்பாடி காது கொடுத்து கேட்கவில்லை: அதிருப்தி எம்எல்ஏ தோப்பு வெங்கடாசலம் பேச்சு

தமிழ் முரசு  தமிழ் முரசு
எங்கள் கோரிக்கைைய எடப்பாடி காது கொடுத்து கேட்கவில்லை: அதிருப்தி எம்எல்ஏ தோப்பு வெங்கடாசலம் பேச்சு

ஈரோடு: அதிமுகவில் போர்க்கொடி தூக்கியுள்ள முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம், தனது தொகுதியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள ஈரோடு மாவட்டம் பெருந்துறை தொகுதி அதிமுக எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான தோப்பு வெங்கடாசலம் நேற்று தமிழக சட்டமன்ற கூட்டத்தை புறக்கணித்துவிட்டு, பெருந்துறையில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.

இக்கூட்டத்தில் அவர் பேசியதாவது: ஜெயலலிதா, தமிழக சட்டமன்றத்தில், 110வது விதியின் கீழ் அறிவித்த கொடிவேரி கூட்டு குடிநீர் திட்டத்தை இன்று வரை செயல்படுத்தப்படவில்லை. கூவத்தூரில் எடப்பாடிக்கு ஆதரவு அளித்தபோது, மாவட்ட செயலாளர் பதவி தருவதாக வாக்குறுதி அளித்தனர்.

ஆனால், தற்போது அதை மறுத்துவிட்டார்கள். சசிகலா கேட்டுக்கொண்டதால் ஆட்சியை தக்க வைப்பதற்காக எடப்பாடியை ஆதரித்தோம்.

கூவத்தூரில் இருந்தபோது, ஓ. பி. எஸ். அணிக்கு ஆதரவளிக்க வேண்டும் என ஏராளமான தொலைபேசி அழைப்புகள் வந்தன.

ஈரோட்டில், அரசு விழாவில் முதல்வர் பங்கேற்றபோது, கொடிவேரி கூட்டு குடிநீர் திட்டம் தொடர்பான அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்த்தேன்.

ஆனால், இல்லை. இவ்விழாவில், ரூ. 720 கோடிக்கு திட்டங்கள் துவக்கப்பட்டது.

ஆனால், பெருந்துறை தொகுதிக்கு எதுவும் இல்லை. கொடிவேரி திட்டம் இருந்திருந்தால் விழாவில் முதல் ஆளாக அமர்ந்திருப்பேன்.

இது, எனக்கு மிகப்பெரிய வேதனை. அதனால்தான், விழாவுக்கு வரவில்லை.
நான், முதல்வரிடம், ஒரு நாளும் அமைச்சர் பதவி கேட்கவில்லை.

தொகுதிக்கான திட்டங்களை மட்டுமே கேட்டேன். ஆட்சிக்கு எங்களால் எந்த நெருக்கடியும் வராது என 8 எம்எல்ஏ. க்களை அழைத்துச்சென்று முதல்வரிடம் நேரில் பேசினேன்.

முழுக்க முழுக்க எங்களது தொகுதிக்கான திட்டங்களைத்தான் கேட்டோம். பெருந்துறையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கை.

இங்கு எய்ம்ஸ் மருத்துவமனை அமைந்தால்தான் ஜெயலலிதாவின் ஆன்மா சாந்தி அடையும் எனவும் எடப்பாடியிடம் கூறினேன். ஆனால், அவர் எதையும் காது கொடுத்து கேட்கவில்லை.

செந்தில்பாலாஜி, பழனியப்பன் ஆகியோரும் இதுபோன்ற கோரிக்கைகளுக்காகவே முதல்வர் எடப்பாடியை சந்தித்து பேசினர்.

110வது விதியின்கீழ் ஜெ. அறிவித்த திட்டத்திற்கு தடங்கல் ஏன் வந்தது என தெரியவில்லை.

இந்த ஆட்சி தொடர வேண்டும் என்பதே எங்களது விருப்பம். எந்த சூழ்நிலையிலும் எங்களால் ஆட்சிக்கு ஆபத்து வராது.

பெருந்துறை 4 வழி சாலை அருகில் கோவை, திருப்பூர் மாவட்ட லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பயன் பெறும் வகையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும். இதுபோன்ற நியாயங்களை கேட்டால், ஆட்சிக்கு நெருக்கடி தருகிறான் என்கிறார்கள்.
இவ்வாறு தோப்பு வெங்கடாசலம் பேசினார்.

ஏற்கனவே எய்ம்ஸ் மருத்துவமனை மதுரை, தஞ்சை, புதுக்கோட்டை ஆகிய இடங்களில் ஏதாவது ஒரு இடத்தில் அமைக்க வேண்டும் என்று அந்தந்த பகுதி அமைச்சர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனால் அமைச்சர்களுக்குள் மோதல் எழுந்துள்ளது.

இந்தநிலையில், தோப்பு வெங்கடாச்சலமும் அதே கோரிக்கையை தற்போது எழுப்பி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

.

மூலக்கதை