பா.ஜனதா கட்சி அதிகாரபூர்வ அறிவிப்பு ஜனாதிபதி வேட்பாளர் ராம்நாத் கோவிந்த்

PARIS TAMIL  PARIS TAMIL
பா.ஜனதா கட்சி அதிகாரபூர்வ அறிவிப்பு ஜனாதிபதி வேட்பாளர் ராம்நாத் கோவிந்த்

இந்திய ஜனாதிபதியாக இருக்கும் மேற்கு வங்காள மாநிலத்தைச் சேர்ந்த பிரணாப் முகர்ஜியின் பதவி காலம் அடுத்த மாதம் (ஜூலை) 24-ந் தேதியுடன் முடிவடைகிறது.

இதனால் அவருக்கு பதிலாக புதிய ஜனாதி பதியை தேர்ந்து எடுக்க ஜூலை 17-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது.

பாராளுமன்றத்தில் பாரதீய ஜனதா பெரும்பான்மை பலத்துடன் இருப்பதாலும், பல மாநிலங்களில் அந்த கட்சியின் ஆட்சி நடைபெறுவதாலும் ஜனாதிபதி தேர்தலில் பாரதீய ஜனதாவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

என்றாலும் புதிய ஜனாதிபதியை போட்டியின்றி தேர்ந்து எடுக்க விரும்பிய அந்த கட்சி, அது தொடர்பாக மூவர் குழு ஒன்றை அமைத்து அதன் மூலம் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. தாங்கள் நிறுத்தும் வேட்பாளரை ஆதரிக்குமாறு எதிர்க் கட்சி தலைவர்களை பாரதீய ஜனதா கேட்டுக்கொண்டது. ஆனால் அதற்கு சாதகமான பதில் கிடைக்கவில்லை.

இந்த நிலையில், ஜனாதிபதி தேர்தலில் பாரதீய ஜனதா சார்பில் போட்டியிடும் வேட்பாளரின் பெயர் நேற்று திடீரென்று அறிவிக்கப்பட்டது.

பாரதீய ஜனதா கட்சியின் கொள்கை முடிவுகளை எடுக்கும் ஆட்சிமன்ற குழு கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, கட்சியின் தலைவர் அமித்ஷா, மத்திய மந்திரிகள் சுஷ்மா சுவராஜ், அருண் ஜெட்லி, வெங்கையா நாயுடு, நிதின் கட்காரி மற்றும் மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.

சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற இந்த கூட்டத்தில், ஜனாதிபதி தேர்தலில் பாரதீய ஜனதா சார்பில், தற்போது பீகார் மாநில கவர்னராக இருக்கும் ராம்நாத் கோவிந்தை வேட்பாளராக நிறுத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

இது பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பை கூட்டம் முடிந்ததும், அமித்ஷா நிருபர்களிடம் தெரிவித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

ஜனாதிபதி தேர்தலில் பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் பீகார் கவர்னர் ராம்நாத் கோவிந்தை வேட்பாளராக நிறுத்துவது என்று முடிவு செய்யப்பட்டு உள்ளது. காங்கிரஸ் மற்றும் பிற எதிர்க் கட்சி தலைவர்களுடன் நடத்திய ஆலோசனைகள் மற்றும் பல்வேறு யோசனைகள், அம்சங்களை கருத்தில் கொண்டு அவரை வேட்பாளராக தேர்வு செய்து இருக்கிறோம்.

இதுபற்றி பிரதமர் மோடி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி, அவர்களுடைய ஆதரவை கேட்டு இருக்கிறார்.

துணை ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் குறித்து ஆட்சிமன்ற குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்படவில்லை. (தற்போது துணை ஜனாதிபதியாக இருக்கும் ஹமீது அன்சாரியின் பதவி காலம் ஆகஸ்டு மாதம் முடிவடைவதால், துணை ஜனாதிபதி பதவிக்கும் விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது)

இவ்வாறு அமித்ஷா கூறினார்.

ஆட்சிமன்ற குழு கூட்டத்தில் ஜனாதிபதி வேட்பாளராக வேறு யாருடைய பெயராவது பரிசீலிக்கப்பட்டதா? என்று கேட்டதற்கு, அதுபற்றி அவர் எதுவும் தெரிவிக்க மறுத்துவிட்டார்.

ராம்நாத் கோவிந்த் பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமாருடன் நல்லுறவு வைத்திருப்பதால், ஜனாதிபதி தேர்தலில் அவரை நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம் ஆதரிக் குமா? என்று அமித்ஷாவிடம் நிருபர்கள் கேட்டனர்.

அதற்கு அவர்; “இந்த கேள்வியை நீங்கள் தவறான இடத்தில் கேட்டுவிட்டீர்கள். ஐக்கிய ஜனதாதளம்தான் இதுபற்றி முடிவு செய்ய வேண்டும்” என்று பதில் அளித்தார்.

ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ராம்நாத் கோவிந்தை பிரதமர் மோடி, உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் மற்றும் பல தலைவர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

விவசாய குடும்பத்தைச் சேர்ந்த ராம்நாத் கோவிந்த் ஜனாதிபதியாக சிறந்த முறையில் பணியாற்றுவார் என்றும், ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்காக அவரது பணி தொடரும் என்றும் தனது டுவிட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ள மோடி, சட்டம் மற்றும் அரசியல் சாசனம் தொடர்பாக அவர் பெற்றுள்ள விசாலமான அறிவு நாட்டுக்கு பெரிதும் பயன் படும் என்றும் கூறி இருக்கிறார்.

மக்களின் நல்வாழ்வுக்காக தனது வாழ்க்கையை அர்ப் பணித்துக்கொண்டவர் என்றும் ராம்நாத் கோவிந்தை அவர் பாராட்டி இருக்கிறார்.

ராம்நாத் கோவிந்த் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும், பாட்னா நகரில் உள்ள கவர்னர் மாளிகைக்கு நேற்று மாலை ஏராளமான செய்தியாளர்கள் சென்று, அவரது கருத்தை அறிய முயன்றனர்.

அப்போது, பாரதீய ஜனதா மேலிடம் விடுத்த அழைப்பை ஏற்று வேட்புமனு தாக்கல் தொடர்பான பணிகளை செய்து முடிக்க டெல்லி செல்வதற்காக ராம்நாத் கோவிந்த் கிளம்பி காரில் வெளியே வந்தார். அவரிடம் செய்தியாளர்கள் கருத்து கேட்க முயன்ற போது, அவர் எதுவும் கூறாமல் கையை அசைத்தபடி, விமானநிலையம் விரைந்தார்.

பிரதமர் மோடி வருகிற 24-ந் தேதி அமெரிக்கா புறப்பட்டு செல்கிறார். எனவே ராம்நாத் கோவிந்த் 23-ந் தேதி (வெள்ளிக்கிழமை) தனது வேட்புமனுவை தாக்கல் செய்வார் என்று தெரிகிறது.

பாரதீய ஜனதா வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருக்கும் 71 வயதான ராம்நாத் கோவிந்த் உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த தலித் தலைவர் ஆவார். வக்கீலான இவர் பாரதீய ஜனதா சார்பில் இரு முறை டெல்லி மேல்-சபை உறுப்பினராக பதவி வகித்து இருக்கிறார். அமித்ஷாவுக்கு மிகவும் நெருக்கமானவர்.

ராம்நாத் கோவிந்த் ஜனாதிபதியாக தேர்ந்து எடுக்கப்பட்டால், கே.ஆர்.நாராயணனுக்கு பிறகு 2-வது தலித் ஜனாதிபதி என்ற பெருமையை அவர் பெறுவார். 

மூலக்கதை