பிரதமர் மோடி தலைமையில் பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி

தினமலர்  தினமலர்
பிரதமர் மோடி தலைமையில் பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி

புதுடில்லி: சர்வதேச யோகா தினமான, நாளை, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், உ.பி.,யில் பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதே சமயம், நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில், மத்திய அமைச்சர்கள் யோகா நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், மத்திய அரசு அமைந்த பின், மூன்றாம் ஆண்டாக, நாளை, சர்வதேச யோகா தினம், நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது.

ஏற்பாடு :


இதையொட்டி, மத்திய அமைச்சர்கள், நாட்டின் பல்வேறு மாநிலங்களுக்கு சென்று, யோகா நிகழ்ச்சிகளுக்கு தலைமை தாங்க உள்ளனர். மத்தியில் ஆளும், தே.ஜ., கூட்டணி ஆட்சி அமைந்துள்ள மாநிலங்களின் முதல்வர்கள் அனைவரும், தங்கள் சொந்த மாநிலங்களில், சர்வதேச யோகா தினத்தன்று, யோகா சிறப்பு நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்தும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

உ.பி.,யில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், பா.ஜ.,வை சேர்ந்த முதல்வர் யோகி ஆதித்யநாத், மாநில அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கும் பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தலைமை :


உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இமாச்சலில், சுஜான்பூர் திரா பகுதியில் நடக்கும் யோகா நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி, மஹாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில், யோகா நிகழ்ச்சிகளுக்கு தலைமை வகிக்கிறார். மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர், மணிப்பூரிலும், ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு, மஹாராஷ்டிரா தலைநகர் மும்பையிலும் பங்கேற்கின்றனர்.

தலைநகர் டில்லியில், மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் வெங்கையா நாயுடு, வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஆகியோர், யோகா நிகழ்ச்சிகளுக்கு தலைமை வகிக்க உள்ளனர்.

சுற்றுப்பயணம் :


யோகா தினம் முடிந்தவுடன், மத்திய அமைச்சர்கள் அனைவரும், முன்னாள் பிரதமர் இந்திராவால் பிரகடனப் படுத்தப்பட்ட, 42வது அவசர நிலை தினத்தை நினைவு கூரும் வகையில், நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு சுற்றுப்பயணம் சென்று, சிறப்புக் கூட்டங்களில் பங்கேற்க திட்டமிட்டுள்ளனர். முந்தைய காங்., பிரதமர்களின் ஆட்சிக் காலத்தில் நடந்த அத்துமீறல் சம்பவங்கள் குறித்து, மக்களிடம் தங்கள் கருத்துக்களை, அமைச்சர்கள் பேச உள்ளனர்.

மூலக்கதை