ஐசிசி ஒருநாள் தரவரிசை பட்டியல் 6வது இடத்துக்கு முன்னேறியது பாகிஸ்தான்

தினகரன்  தினகரன்

துபாய்: மினி உலக கோப்பையை முதல் முறையாக வென்ற பாகிஸ்தான் அணி, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசையில் 2 இடம் முன்னேறி 6வது இடத்தை பிடித்தது. இங்கிலாந்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்திய அணியை 180 ரன் வித்தியாசத்தி வீழ்த்தி கோப்பையை கைப்பற்றிய பாகிஸ்தான் 95 ரேட்டிங் புள்ளிகளுடன் இலங்கை மற்றும் வங்கதேச அணிகளைப் பின்னுக்குத் தள்ளி 6வது இடத்துக்கு முன்னேறி உள்ளது. சாம்பியன்ஸ் டிராபிக்கான டாப் 8 அணிகளில் கடைசி இடத்துடன் களமிறங்கிய அந்த அணி, யாரும் எதிர்பாராத வகையில் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளது.இதனால் 2019ல் நடைபெற உள்ள ஐசிசி உலக கோப்பை தொடருக்கு அந்த அணி நேரடியாகத் தகுதி பெறுவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது. வரும் செப். 30ம் தேதி நிலவரப்படி, போட்டியை நடத்தும் இங்கிலாந்துடன் தரவரிசையில் முதல் 7 இடங்களில் உள்ள அணிகள் மட்டுமே நேரடியாக தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது. தென் ஆப்ரிக்கா (119), ஆஸ்திரேலியா (117), இந்தியா (116) முதல் 3 இடங்களில் உள்ளன. பேட்டிங் தரவரிசை பட்டியலில் இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லியும் (865), பந்துவீச்சாளர்களுக்கான பட்டியலில் ஆஸ்திரேலிய வேகம் ஜோஷ் ஹேசல்வுட், ஆல்ரவுண்டர்களுக்கான ரேங்கிங்கில் வங்கதேசத்தின் ஷாகிப் அல் ஹசன் முதலிடம் வகிக்கின்றனர். ரோகித் ஷர்மா 3 இடம் முன்னேறி 10வது இடத்தை பிடித்துள்ளார்.

மூலக்கதை