பண பேர விவகாரம் தொடர்பாக ஸ்டாலின் தொடர்ந்த வழக்கு: சட்டப்பேரவை செயலாளர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

தி இந்து  தி இந்து
பண பேர விவகாரம் தொடர்பாக ஸ்டாலின் தொடர்ந்த வழக்கு: சட்டப்பேரவை செயலாளர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

அதிமுக எம்எல்ஏக்களின் பண பேர விவகாரம் தொடர்பாக எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் தொடர்ந்த வழக்கில் சட்டப்பேரவை செயலாளர் பதிலளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முதல்வர் கே.பழனிசாமி தலைமையிலான அரசு, கடந்த பிப்ரவரியில் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கு கோரியது. அப்போது தங்களுக்கு ஆதரவாக வாக்களிக்க அதிமுக எம்எல்ஏக்களுக்கு பல கோடி பேரம் பேசியதாக மதுரை மேற்கு தொகுதி எம்எல்ஏ சரவணன் பேசியிருந்த வீடியோவை ஆங்கில தொலைக்காட்சி ஒன்று கடந்த வாரம் வெளியிட்டது. 'அந்த வீடியோவில் இருப்பது நான்தான். ஆனால், அந்தக் குரல் என்னுடையது அல்ல' என்று எம்எல்ஏ சரவணன் மறுப்பு தெரிவித்தார். இந்த வீடியோ விவகாரம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தப் பிரச்சினை தொடர்பாக சட்டப்பேரவையில் விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார் ஆனால், பேரவைத் தலைவர் அதற்கு அனுமதி அளிக்கவில்லை.

இந்த நிலையில் அதிமுக எம்எல்ஏக்கள் பணபேரத்தில் ஈடுபட்டது குறித்து உயர் நீதிமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் மனு தாக்கல் செய்தார். அம்மனுவில், "தனியார் தொலைகாட்சி ஒன்றில், தமிழக சட்டப்பேரவை நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக வாக்களிக்க அதிமுக எம்ஏக்களுக்கு பண பேரம் நடைபெற்றதாக மதுரை தெற்கு தொகுதி எம்எல்ஏ சரவணன் பேசியதாக வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாங்கள் நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பாக முன்னதாகவே வழக்கு ஒன்று தொடர்ந்திருந்தோம். இதற்கு தற்போது வெளியாகியுள்ள வீடியோ முக்கியமான சாட்சியம். அதனால் பண பேர விவகாரம் தொடர்பாக உடனடியாக சிபிஐ விசராணனைக்கு உத்தரவிட வேண்டும்" என்று கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு மீதான விசாரணை இன்று (திங்கட்கிழமை) எம். சத்திய நாரயணன், எம். சுந்தார் ஆகிய நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் இந்த மனு விசாரணைக்கு உகந்ததா? இல்லையா? என்பதை சிபிஐ மற்றும் வருவாய் குற்ற புலனாய்வுதுறை, தமிழக சட்டப் பேரவை செயலாளர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டனர்.

மேலும், நீதிபதிகள் இவ்வழக்கின் விசாரணை வரும் வெள்ளிக்கிழமைக்கு தள்ளி வைத்துள்ளனர்.

Keywords: சென்னைதிமுகஎடப்பாடி பழனிசாமிபண பேர விவகாரம்விசாரணை

மூலக்கதை